புதுக்கோட்டையில் பா.ஜனதா-விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்;கலெக்டர் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு
புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பா.ஜனதா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். மேலும், கலெக்டரின் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை,
அம்பேத்கர் பிறந்தநாள்
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் கட்சி சார்பில் நேற்று மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பா.ஜனதா சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக அக்கட்சியை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக வந்தனர். அப்போது அங்கு ஏற்கனவே வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக நின்று கொண்டிருந்தனர்.
சிலைக்கு மாலை
இந்தநிலையில் இரு கட்சியினரும் மாலையிட முயன்றனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பா.ஜனதா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இருதரப்பினரும் அம்பேத்கர் சிலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர் பாவாணன் தலைமையிலான நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதன்பின்னர் பா.ஜனதாவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
முற்றுகை போராட்டம்
இதையடுத்து, இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து செல்லாமல் கோஷங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதனைத்தொடர்ந்து பா.ஜனதாவினர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வீட்டின் முன்பாக அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டரின் வீட்டின் முன் கதவு மூடப்பட்டது. மேலும் அந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பா.ஜனதாவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு எதிராகவும் போலீசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் மாவட்ட கலெக்டரை சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதுவரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பா.ஜனதாவினர் கூறினர்.
கலெக்டருடன் சந்திப்பு
இந்தநிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு கலெக்டர் வீட்டிற்கு திரும்பினார். அப்போது அங்கு கூடியிருந்த பா.ஜனதா மாநில துணை தலைவர் புரட்சி கவிதாசன் தலைமையிலான நிர்வாகிகள் கலெக்டர் கவிதா ராமுவை சந்தித்து நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். அதன்பேரில் அங்கிருந்த பா.ஜனதாவினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக புதுக்கோட்டையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story