சட்டவிரோதமாக கொண்டு வந்து ஒட்டகங்களை பலியிடுவோர் மீது வழக்கு


சட்டவிரோதமாக கொண்டு வந்து ஒட்டகங்களை பலியிடுவோர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 April 2022 2:53 AM IST (Updated: 15 April 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோதமாக கொண்டு வந்து ஒட்டகங்களை பலியிடுவோர் மீது வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

தமிழகத்துக்கு சட்டவிரோதமாக ஒட்டகம் கொண்டு வருவதையும், பலியிடுவதையும் தடுக்க அரசுக்கு உத்தரவிட கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து ஒட்டகங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு பலியிடப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு தரப்பில், சட்டவிரோதமாக ஒட்டகங்கள் கொண்டு வரப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக ஒட்டகங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு, பலியிடும் நிகழ்வுகள் நடைபெறவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

அதில், ‘ஒட்டகங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு பலியிடுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக ஒட்டகங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து பலியிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக மிருகவதை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story