132-வது பிறந்தநாள்: அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை


132-வது பிறந்தநாள்: அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை
x
தினத்தந்தி 15 April 2022 3:39 AM IST (Updated: 15 April 2022 3:39 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

சென்னை,

சட்டமேதை அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்துக்கு அ.தி.மு.க. சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. டாக்டர் ஜெ.ஜெயவர்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

டாக்டர் ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் இசக்கி படையாட்சி, மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மாவட்ட தலைவர் பாவலைராயன் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், பொருளாளர் ரூபி மனோகரன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.

எல்.முருகன், வைகோ, திருமாவளவன்

சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் தலைமையில் துணை தலைவர் வி.பி.துரைசாமி, பொதுசெயலாளர் கரு.நாகராஜன், சென்னை கோட்ட பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், இளைஞரணி பொருளாளர் ஜி.சுரேஷ் கர்ணா, நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ தலைமையில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.ராஜேந்திரன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி உள்பட நிர்வாகிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகளும், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் மாநில வர்த்தகர் அணித் தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், செய்தித்தொடர்பாளர் ஜி.சந்தானம் உள்பட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினார்கள்.

கி.வீரமணி

சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கம் அருகே அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுசெயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், பொருளாளர் வீ.குமரேசன், பிரசார செயலாளர் வக்கீல் அ.அருள்மொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரேமலதா, ஜி.கே.வாசன்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப்படத்துக்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கோடைகால தண்ணீர் பந்தலையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க. துணை பொதுசெயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை ராஜாஜி சாலை துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் பொதுச்செயலாளர் திருவேங்கடம், தலைமை நிலைய செயலாளர் டி.என்.அசோகன் மற்றும் மாவட்ட தலைவர்கள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் பொருளாளர் கண்ணன், நாடார் பேரவை மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.

கே.பாலகிருஷ்ணன்

சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார். அப்போது மத்திய குழு உறுப்பினர்கள் பி.சம்பத், பெ.சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சமூக நீதி மக்கள் இயக்கத்தின் நிறுவனர் ஏ.கே.அம்பேத்கர்தாசன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்கள். இதே போன்று பல்வேறு இடங்களில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை துறைமுகம் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக தலித் கட்சி தலைவர் தலித் குடிமகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பொதுசெயலாளர் தலித் தமிழ்செல்வன், பொருளாளர் தலித் தேவராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சென்னை துறைமுகம்

சென்னை துறைமுகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. துறை முக வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால், துணைத் தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.



Next Story