கார் மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம்...!


கார் மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு -  4 பேர் படுகாயம்...!
x
தினத்தந்தி 15 April 2022 9:45 AM IST (Updated: 15 April 2022 9:38 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே கார் மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

திருவண்ணாமலை, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமத்தூர் பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள், 2ஆண்கள் சிங்கார பேட்டையில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு காரில் புறப்பட்டு சென்றனர். 

காரை பாலன் என்பவர் ஓட்டிச் சென்றார். கார் இன்று காலை 7.30 மணி அளவில் திருவண்ணாமலை- செங்கம் சாலையில் கிரிவலப் பாதை பிரிவு அருகில் சென்றது.

அப்போது செங்கம் சாலை வழியாக திருவண்ணாமலை நோக்கி வேகமாக வந்த ஒருவேன் கார் மீது  நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது .இதில் கார் டிரைவர் பாலன் மற்றும் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் காரில் இருந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் காயமடைந்தனர்.
இதனைக் கண்ட வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இந்த விபத்து காரணமாக திருவண்ணாமலை செங்கம் சாலையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. 

இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த 4 பேரையும் மீட்டு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பலியான 2 பேர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story