கள்ளழகர் வைகையில் இறங்குகிறார்...!


கள்ளழகர்  வைகையில் இறங்குகிறார்...!
x
தினத்தந்தி 16 April 2022 5:48 AM IST (Updated: 16 April 2022 5:48 AM IST)
t-max-icont-min-icon

உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார்.


மதுரை, 

“கோவில் மாநகர்” என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. இந்த ஆண்டுக்கான சிறப்புமிக்க சித்திரைத்திருவிழா கடந்த 5-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மீனாட்சி அம்மன் கோவிலில் 12-ந்தேதி பட்டாபிஷேகமும், 13-ந்தேதி திக்குவிஜயமும், நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், நேற்று தேரோட்டமும் நடைபெற்றது. இதேபோன்று அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மதுரைக்கு புறப்பட்டார். அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, வர்ணித்து பாட்டுப்பாடி அதிர்வேட்டுகள் முழங்க கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். அங்கே திருமஞ்சனமானார். இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இன்றுஅதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.  இன்று காலை 5.50 மணிமுதல் 6.20 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

கொரோனா பரவல் குறைந்ததையடுத்து அடுத்து இந்தாண்டு பக்தர்களுடன் சித்திரைத்திருவிழா நடைபெறுகிறது.

அழகர் மலையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர் வழிநெடுக சுமார் 450 மண்டகபடிகளில் எழுந்தருளினார்.

கள்ளழகர் வையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை காண லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வையொட்டி சுமார் 4,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Next Story