அரசு நிலங்களின் பரப்பளவு சுருங்கி வருகிறது: சென்னை ஐகோர்ட்டு கண்டனம்


அரசு நிலங்களின் பரப்பளவு சுருங்கி வருகிறது: சென்னை ஐகோர்ட்டு கண்டனம்
x
தினத்தந்தி 16 April 2022 5:57 AM IST (Updated: 16 April 2022 5:57 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பளவு சுருங்கிக் கொண்டே வருகிறது. சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டவர்களுக்காக ஒருபோதும் உதவ முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் அண்ணாத்துரை. இவர் சென்னை ஐகோர்ட்டில் பட்டா கேட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

நாங்கள் வசித்து வரும் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை கிராம நத்தமாக வகை மாற்றம் செய்ய மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்தும், அது நிறைவேற்றப்படவி்ல்லை. இதனால் எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

ஆக்கிரமிப்புக்கு அங்கீகாரம்

இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தபோது, அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், “அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அந்த நிலத்துக்கு பட்டா கோர உரிமையில்லை. ஆனால், பெத்தேல் நகரில் வசிப்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே ஆரம்பகாலத்தில் இருந்து வசித்து வருகின்றனர். மற்றவர்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து விலைக்கு வாங்கியவர்கள். எனவே அவர்களுக்கு பட்டா வழங்கினால் ஆக்கிரமிப்புக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது போல் ஆகிவிடும்” என்றார்.

அதிகாரிகளின் கடமை

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அரசின் அனுமதியின்றி மாவட்ட கலெக்டரால் நிலத்தை வகை மாற்றம் செய்ய முடியாது. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பளவு சுருங்கிக்கொண்டே வருகிறது. அரசு நிலங்களை பாதுகாப்பது வருவாய்த்துறை அதிகாரிகளின் கடமை. நிச்சயமாக அதிகாரிகளுக்கு தெரியாமல் இந்த ஆக்கிரமிப்புகள் நடந்திருக்காது. அரசு நிலங்களை ஆக்கிரமிக்கும், சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டவர்களுக்காக ஒருபோதும் உதவ முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு கூறியுள்ளனர்.

Next Story