விபத்து ஏற்படுத்திய சாப்ட்வேர் ஊழியரை கடத்தி பணம் பறிக்க முயற்சி..!
காவேரிப்பட்டணம் அருகே விபத்தை ஏற்படுத்திய சாப்ட்வேர் நிறுவன ஊழியரை கடத்தி, ரூ.1.50 லட்சம் பறிக்க முயற்சி செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த ராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் லாயூடு பர்க் (31). இவர் பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 14-ந் தேதி நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுந்தரம், அருள், நஞ்சுண்டன் உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை கண்ட அங்கிருந்த காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சந்தோஷ்(27), அன்பரசன்(26), லோகநாதன்(23) ஆகியோர், ஆல்வினிடம் விபத்து குறித்து போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டாம் எனவும், பேசிக் கொள்வோம் என தெரிவித்தனர்.
மேலும், ஆல்வினை, 3 பேரும் காவேரிப்பட்டணம் தேர்ப்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று அறையில் அடைத்தனர். அப்போது ஆல்வினிடம் 3 பேரும், ரூ-.1 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கூறி மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து ஆல்வின், நாகர்கோவிலில் உள்ள அவரின் தந்தைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதில் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் போலீஸார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆல்வினை மீட்டனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தோஷ், அன்பரசன், லோகநாதன் 3 பேரையும் கைது செய்தனர். மேலும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கும், ஆல்வினை கடத்திச் சென்றவர்களுக்கு எவ்வித தொடர்பு இல்லை எனவும், பணம் பறிக்கும் நோக்கில் விடுதியில் அடைத்து வைத்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story