கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி மகன் உள்பட 3 பேரிடம் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி மகன் உள்பட 3 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
கோவை,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணதாபா படுகாயம் அடைந்தார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி சேலத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை குறித்து முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
சேலம் சாலை விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுகுட்டியிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்து உள்ளார்.
இதையடுத்து ஆறுகுட்டியிடம் நேற்று கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஆறுகுட்டியின் மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, ஆறுகுட்டியுடன் முன்பு உதவியாளராக இருந்த நாராயணன் ஆகியோரிடம் இன்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது கனகராஜ் எத்தனை ஆண்டுகள் கோவையில் தங்கியிருந்தார், ஜெயலலிதா இறந்த பின்னர் அவரை யார், யாரெல்லாம் சந்தித்தனர் என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
Related Tags :
Next Story