வேதாரண்யம் அருகே திடீரென உள்வாங்கிய கிணறு - பொதுமக்கள் அச்சம்


வேதாரண்யம் அருகே திடீரென உள்வாங்கிய கிணறு - பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 16 April 2022 3:21 PM GMT (Updated: 2022-04-16T20:51:32+05:30)

வேதாரண்யம் அருகே திடீரென கிணறு உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை வடகாடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் உள்ள மா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச கிணறு ஒன்றை  வெட்டினார். இந்நிலையில் இன்று காலை அந்த கிணறு திடீரென உள்வாங்கியது. இதை பார்த்த  விவசாயி கந்தசாமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- 

மா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும்,  ஊடுபயிராக கடலை  சாகுபடிக்கும் தண்ணீர் தேவைப்பட்டது. இதற்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது தோட்டத்தில் கிணறு வெட்டினேன். 20 அடி சுற்றளவிலும்,  22 அடி ஆழத்திலும் இந்த கிணற்றை வெட்டினேன். இதில் தண்ணீர் நன்றாக ஊறியதால் பயிர்களுக்கு பாய்ச்சி விவசாயம் செய்து வந்தேன்.

இந்த நிலையில் இன்று காலை வந்து பார்த்தபோது கிணறு  உள்வாங்கி பூமிக்குள் சென்றிருந்தது.  இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. மண்ணும் சரிந்துவிட்டது. நேற்று இப்பகுதியில் மின்னல் தாக்கியதில் சில வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. மின்னல் தாக்கியதால்  கிணறு உள்வாங்கியதா? அல்லது நில நடுக்கமா?  என   தெரியவில்லை. இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

வேதாரண்யம் அருகே திடீரென கிணறு  உள்வாங்கியதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story