தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு


தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 16 April 2022 11:05 PM IST (Updated: 16 April 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த விருந்தை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. இதனால் புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுவையில் நிரந்தர கவர்னரை நியமிக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
கவர்னர் மாளிகையில் விழா
சித்திரை முழு நிலவொளியில் கூடுவோம்-விருந்துண்போம், தமிழ் புத்தாண்டை கொண்டாடுவோம் நிகழ்ச்சி புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, சாய் ஜெ சரவணன்குமார், சட்டசபை துணைத் தலைவர் ராஜவேலு மற்றும் எம்.எல்.ஏ.க்கள், தலைமைச் செயலர்அஸ்வனிகுமார், அரசுத்துறை அதிகாரிகள், அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து வாழ்த்து கூறினார். பதிலுக்கு அவர்களும் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி புறக்கணிப்பு
இந்த விருந்தில் கலந்துகொள்ளுமாறு ஏற்கனவே புதுவையை சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விருந்தை தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.
இது தொடர்பாக புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. கூறியதாவது:-
புதுச்சேரி மக்களின் தன்மானமும், மரியாதையும் தற்போது அடகு வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நேரடி ஆட்சி நடக்கிறது. கவர்னரும், தலைமை செயலாளரும் ஆட்சியை நடத்துகிறார்கள்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி அதை வேடிக்கை பார்க்கிறார். புதுவைக்கு தேவையான நிதியையும் மத்திய அரசு தரவில்லை. புதிய தொழில் தொடங்கவும் ஏற்பாடுகள் செய்யவில்லை. உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு சம்பளமில்லை.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை மத்திய அரசு வழங்குகிறது. அதேபோல் புதுச்சேரிக்கு வழங்கப்படவில்லை. அதையெல்லாம் தராமல் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்கிறார்கள்.
உல்லாச வாழ்க்கை வாழ மத்திய அரசு அதிகாரிகள் இங்கு வருகிறார்கள். தலைமை செயலாளர் புதுவைக்கு பிடித்த கேடாக உள்ளார். இப்படியிருக்க தற்போது விருந்து அளிக்கிறார்கள். இந்த விருந்தை நாங்கள் புறக்கணிக்கிறோம்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. கூறினார்.
ஆட்டிப்படைக்கிறார்
காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருந்து கொடுப்பதற்காக அனைத்துக் கட்சிகளின் மாநில தலைமை பொறுப்பாளர்களுக்கும் மற்றும் பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதை காங்கிரஸ் புறக்கணிக்கிறது. பொறுப்பு கவர்னராக உள்ள இவரின் செயல்பாடுகள் பா.ஜ.க.வின் செயல்பாடு போல் உள்ளது. பா.ஜ.க.வின் கொள்கைகளை இவர் பாராட்டி பேசுகிறார். ஆனால் புதுவைக்கு தேவையான நிதியை பெற்று கொடுப்பதில்லை.
மறைமுகமாக இவர், புதுவை மாநில அரசை நடத்துகிறார், ஆட்டிப்படைக்கிறார். எனவே பொறுப்பு வகிக்கும் கவர்னரை திரும்பப்பெற வேண்டும், புதுச்சேரிக்கு நிரந்தர கவர்னரை நியமிக்கவேண்டும் என்று மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தியுள்ளோம். எனவே விருந்தை காங்கிரஸ் புறக்கணிக்கிறது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
பண்பாடு தெரியவில்லை
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் கூறுகையில் ‘புதுவை பொறுப்பு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பகிரங்கமாக பா.ஜ.க.வின் திட்டத்தை செயல்படுத்துகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படுகிறார். இதையெல்லாம் கண்டித்துதான் பொறுப்பு கவர்னரை நீக்கவேண்டும் என்று நாங்கள் போராட்டம் நடத்தினோம். கவர்னர் அளிக்கும் இந்த விருந்தை புறக்கணிக்கிறோம்’ என்றார். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜாங்கம் கூறுகையில், ‘விருந்துக்கு அழைக்கும் கவர்னருக்கு தமிழர் பண்பாடே தெரியவில்லை. கவர்னர் மாளிகையின் கடைநிலை ஊழியரை விட்டு கட்சி தலைவர்களிடம் விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார். அரசியல் கட்சி தலைவர்களை எப்படி அழைக்கவேண்டும் என்பது கூட கவர்னர் மாளிகைக்கு தெரியவில்லை. முறையற்ற இந்த அழைப்பு வரும்போதே நான் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்துவிட்டேன்’ என்றார்.
சுடுகாடாகிறது
விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் கூறுகையில் ‘ஒரு மாநிலத்தில் நடக்கும் ஆட்சியால் மக்கள் சுபிட்சமாக இருந்தால் விருந்து அளிக்கலாம். ஆனால் அரசின் முடிவுகளை மக்கள் மதிக்காத நிலையில் விருந்து எதற்கு? புதுச்சேரியே தற்போது சுடுகாடாக மாறி வருகிறது. மக்கள் அரசுக்கு நேர்மாறாக ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள். இதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாமல் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூனிக்குறுகிப் போய் உள்ளார். எங்களுக்கு விருந்து தொடர்பாக இதுவரை அழைப்பு வரவில்லை. அப்படி வந்தாலும் அதில் கலந்துகொள்ளமாட்டோம்’ என்றார். 
தமிழகத்தைப் போல்...
கடந்த 14-ந்தேதி தமிழகத்தில் கவர்னர் ஆர்.என். ரவி அளித்த தேநீர் விருந்தை நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அரசும், தி.மு.க. கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன.
இதே பாணியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விருந்துக்கு அழைத்ததை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் புறக்கணித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story