வரும் காலத்தில் நீதித்துறையில் பெண் வக்கீல்கள் தேவை அதிகரிக்கும்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி


வரும் காலத்தில் நீதித்துறையில் பெண் வக்கீல்கள் தேவை அதிகரிக்கும்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி
x
தினத்தந்தி 17 April 2022 4:29 AM IST (Updated: 17 April 2022 4:29 AM IST)
t-max-icont-min-icon

நீதித்துறையில் பெண் வக்கீல்கள் தேவை வரும் காலத்தில் அதிகரிக்கும் என சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பேசினார்.

நீதிபதிக்கு பாராட்டு

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த எம்.எம்.சுந்தரேஷ் பதவியேற்றதை தொடர்ந்து, தமிழ்நாடு பெண் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று அவருக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு தமிழ்நாடு பெண் வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் கே.சாந்தகுமாரி தலைமை தாங்கினார். துணை தலைவர் வேதவள்ளி குமார் வரவேற்று பேசினார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.கண்ணம்மாள், அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தின் தலைவர் நீதிபதி கே.என்.பாஷா, இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உள்பட நீதிபதிகள், வக்கீல்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டு எம்.எம்.சுந்தரேசுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேசுக்கு நினைவு பரிசுகளையும், சிறப்பு புத்தகங்களும் வழங்கி கவுரவித்தனர். இதைத்தொடர்ந்து, ஏற்புரை வழங்கி நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது:-

நல்ல நீதிபதியாக வர முடியும்

சமுதாய அமைப்பு, கட்டமைப்பு பற்றி தெரிந்து கொண்டால் தான் ஒருவர் நல்ல நீதிபதியாக வர முடியும். ஒரே சட்டத்தை பின்பற்றி சமுதாயத்தில் இருக்கின்ற பலருக்கு நீதி அளிப்பது என்பது சரியானது அல்ல. கிரிமினல் வழக்குகளை பார்க்கும் போது, நீதிபதி அதனை உயர்ந்த நிலையில் இருந்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் இருக்கின்ற நீதிமன்ற கட்டமைப்பில் கிரிமினல் வழக்குகளில் வழங்குகின்ற தீர்ப்பினுடைய அணுகுமுறையை இந்தியாவில் வேறு எங்கும் நான் பார்த்தது இல்லை.

ஒரு ஏழை சுப்ரீம் கோர்ட்டில் நீதி கேட்கிறான் என்றால், அது அந்த ஏழையின் தவறு அல்ல. நம்முடைய தவறு. இந்த கட்டமைப்பின் தவறு. மனிதன் ஆறறிவு கொண்டவனாக இருந்தால், மற்றவர்களிடம் கருணை காட்ட வேண்டும். பெண் இல்லாமல் இந்த உலகம் இல்லை. ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கிறாள் என்று சொல்வது தவறு. ஆணின் வெற்றிக்கு முன்னால் பெண் இருக்கிறாள் என்பது தான் சரி.

நீதித்துறையில் பெண்களின் பங்கு

போராடுவது இயற்கையாகவே பெண்ணுக்கு இருக்கிறது. பெண்கள் நீதித்துறைக்கு அதிகளவில் வர வேண்டும். வரும் காலத்தில் பெண் வக்கீல்கள் தேவை அதிகரிக்கும். வழக்குகளின் தன்மை தற்போது மாறிக்கொண்டிருக்கிறது. அந்தவகையில், தொழில்நுட்பம் சார்ந்த வழக்குகள்தான் அதிகளவில் வருகிறது.

அதேபோல், சிறு வழக்குகளும், சமுதாயத்தினுடைய மாற்றத்தையொட்டிய வழக்குகளாக வரும் காலத்தில் மாறும். பெண்களுடைய பங்கு நீதித்துறையில் வருகின்ற காலத்தில் அதிகரிக்கும். இதுபோன்ற சங்கங்கள் இளம்பெண் வக்கீல்களை ஊக்குவிக்க வேண்டும். இந்த பாராட்டுகளை எல்லாம் என்னை ஊக்குவிப்பதாக எடுத்து கொள்கிறேன். என்னால் முடிந்த வரை தகுதியான பெண் வக்கீல்களுக்கு நீதிபதி பதவி கிடைக்க வழிவகை செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story