கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை


கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 16 April 2022 11:43 PM GMT (Updated: 16 April 2022 11:43 PM GMT)

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

சென்னை,

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள் அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டு ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை திருப்பலி ஆகியவற்றில் கலந்து கொள்வார்கள். இத்தகைய தினம் கிறிஸ்தவர்களுக்கு முக்கிய நாளாகும்.

இந்த ஆண்டின் ஈஸ்டர் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஏசு உயிர்ப்பு திருப்பலி நடைபெற்றது.

மதுரை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நேற்று இரவு 10.30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை தொடங்கியது. பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு ஏசு உயிர்ப்பு பெருவிழா திருப்பலி நடந்தது. 

பாளையங்கோட்டை சவேரியார் பேராலயத்தில் நேற்று நள்ளிரவு 11.30 மணி சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. அப்போது ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூறும் வகையில் இறைமக்கள் அனைவரும் தங்களது கைகளில் மெழுகுவர்த்தி ஏற்றினார்கள். 

இதேபோல் பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோடு புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளிட்ட கத்தோலிக்க ஆலயங்களில் நேற்று நள்ளிரவு ஈஸ்டர் பண்டிகை பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதேபோல் பாளையங்கோட்டை கதீட்ரல் பேராலயம் உள்ளிட்ட சி.எஸ்.ஐ ஆலயங்களில் இன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் நேற்று இரவு பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு, ஒளி வழிபாடு, வார்த்தை வழிபாடு ஆகியவை நடந்தது. இந்த நிகழ்வுகளின் போது எகிப்தில் இருந்து இஸ்ரவேல் மக்கள் செங்கடலை கடந்து சென்ற நிகழ்வு நினைவூட்டப்பட்டது. புதிய மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு, கிறிஸ்தவர்களின் திருமுழுக்கு வார்த்தைப்பாடுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. புனித நீர் மந்திரிக்கப்பட்டது. இந்த வழிபாட்டு நிகழ்வுகள் கொரோனா காலமாக கடந்த 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. 

Next Story