சிறுமியின் உயிரை பறித்த இன்ஸ்டாகிராம் நட்பு...! - பரபரப்பு தகவல்கள்
ஆண் நண்பருடனான நட்பை காதல் என நினைத்து பெற்றோர் கண்டித்த விரக்தியில் சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை,
சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இவரின் மகள் திவ்யதர்ஷினி, அங்குள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். ஒரே மகள் என்பதால் அவரை செல்லமாக வளர்த்து வந்தனர்.
கடந்த 10ஆம் தேதி பள்ளி செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளிக்கவே, அவர்கள் சிறுமியை தேடி வந்தனர்.
இந்த சூழலில் கடந்த 12ம் தேதி மதுரை அலங்காநல்லூர் அருகே பனங்காடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சென்னையில் உள்ள பெற்றோருக்கு தகவல் தெரிவித்த போலீசார் சிறுமி கைப்பட எழுதிய 7 பக்க கடிதம் ஒன்றை மீட்டனர். அதில், தான் சாக போகிறேன் என்றும், தன்னால் பெற்றோர்களுக்கு எந்த தொந்தரவும் இனி வராது என்றும், தன் நண்பருக்கு தன்னுடைய பெற்றோர் எந்த இடையூறும் செய்யக் கூடாது என எழுதி வைத்திருந்தார்.
அவர் குறிப்பிட்ட நண்பர் யார்? என போலீசார் விசாரணை நடத்திய போது தான் அத்தனையும் வெளிச்சத்திற்கு வந்தது. இன்ஸ்டாகிராமில் துடிப்பாக இயங்கி வந்த திவ்யதர்ஷினிக்கு அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் விவகாரம் திவ்யதர்ஷினிக்கு வீட்டாருக்கு தெரியவரவே, அவர்கள் மகளை அழைத்து கண்டித்துள்ளனர். மேலும் படிப்பிலும் சிறுமி பின் தங்கவே, ஆசிரியர்கள் மாணவியை கண்டித்ததாக தெரிகிறது.
பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு பள்ளி நிர்வாகம் கூறவே, அப்போது சிறுவனுடனான நட்பை காதல் என நினைத்து பெற்றோர் சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த திவ்யதர்ஷினி கடந்த 10ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி தனியே பேருந்தில் ஏறி திருச்சிக்கு சென்றுள்ளார்.
அப்போது பெண் ஒருவரிடம் செல்போனை வாங்கி தன் இன்ஸ்டாகிராம் நண்பருக்கு போன் செய்து நான் சாக போகிறேன் என்றும், இனி என்னால் உனக்கு எந்த பிரச்சினையும் வராது என கூறியிருக்கிறார்.
பின்னர் திருச்சியில் இருந்து மதுரைக்கு தனியே சென்ற அவர், அலங்காநல்லூர் செல்லும் பாதையில் பனங்காடி எனும் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் அருகே ஆட்டோவிலிருந்து இறங்கி சென்றுள்ளார்..
அங்கு சென்ற அவர், 7 பக்கம் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தான் கையோடு கொண்டு வந்திருந்த புடவையை எடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்திருக்கிறது.
ஆண் நண்பருடனான நட்பை காதல் என நினைத்து பெற்றோர் கண்டித்த விரக்தியில் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள், தோழிகள் என அனைவரையும் உலுக்கியிருக்கிறது.
Related Tags :
Next Story