கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
பாகூர் அருகே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாகூர் அருகே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
போலீசில் சிக்கினார்
பாகூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 63 வயது மூதாட்டி ஒருவர் விவசாய நிலத்தில் களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் மூதாட்டியை தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர்.
இந்தநிலையில் கடலூர் மாவட்டம் தூக்கனாம்பாக்கம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (23) என்பவரை நேற்று பாகூர் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
திருட்டில் தொடர்புடையவர்
இதில், பாகூர் அருகே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடியதை போலீசில் அவர் ஒப்புக் கொண்டார்.
சிலம்பரசன் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மூதாட்டி பாலியல் பலாத்கார சம்பவத்துக்கு முன் கடலூர் புதுநகர் போலீசாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சிலம்பரசன் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் புதுச்சேரி ஆராய்ச்சிகுப்பம் சாராயக் கடையில் சாராயம் குடித்துவிட்டு சோரியாங்குப்பம் செல்லும் வழியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் செல்போன் கேட்டு வம்பு செய்துள்ளார்.
மது போதையில் இருந்ததால் சுதாரித்துக் கொண்ட அந்த பெண் செல்போனை தர மறுத்து கூச்சல் போட்டுள்ளார். இதனால் சிலம்பரசன் அங்கிருந்து சென்றார்.
கட்டையால் தாக்கி பலாத்காரம்
சிறிது தூரம் சென்ற சிலம்பரசன் அருகில் அதேபோல் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த மூதாட்டி ஒருவரிடம் தண்ணீர் கேட்டுள்ளார். சிலம்பரசன் மது போதையில் இருந்ததால் மூதாட்டி தண்ணீர் தர மறுத்துள்ளார். அருகில் தண்ணீர் பாட்டில் இருந்தும் தர மறுத்தால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் அங்கு கிடந்த உருட்டு கட்டையால் மூதாட்டியை தாக்கினார். இதில் தலை, கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார்.
அதன்பின் மூதாட்டியை தரதரவென இழுத்துச் சென்று முட்புதரில் வைத்து சிலம்பரசன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. அப்போது மூதாட்டியின் பேரன் வந்து கூச்சலிடவே சிலம்பரசன் அங்கிருந்து தப்பி ஓடி ஆற்றில் இறங்கி மறுபக்கம் தப்பி ஓடினார்.
இதையடுத்து போலீசாருக்கு தன் மீது சந்தேகம் இருக்காது என கருதி வழக்கம் போல் சுற்றி வந்துள்ளார். இந்தநிலையில் தான் நேற்று சிலம்பரசன் கைது செய்யப்பட்டார்.
மற்றொரு மூதாட்டியிடம் பலாத்காரம்?
தமிழக பகுதியான அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சரக பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் வாலிபரால் மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அதற்கும் சிலம்பரசனுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் ஜெயங்கொண்டம் குற்றப்பிரிவு போலீசார் அதிகாலை 4 மணி வரை விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சிலம்பரசனை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
சிலம்பரசன் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொலை, கொலை முயற்சி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.
பாகூர் அருகே கிராமத்தில் மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் எந்த தடயமும் கிடைக்காத நிலையில் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவத்தில் 2 மாதங்களுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்த பாகூர் போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
Related Tags :
Next Story