கோவை: ஆய்வுக்கு சென்ற பணிகள் குழு தலைவர் வழுக்கி விழுந்ததால் கை முறிந்தது
கோவை வாலாங்குளக்கரையில், படகுசவாரி தொடர்பாக ஆய்வு செய்யச்சென்ற பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன் வழுக்கி விழுந்ததால் கைமுறிந்து காயம் அடைந்தார்.
கோவை,
கோவை வாலாங்குளத்தில் படகுசவாரி விட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பணிகள் குழு தலைவர் சாந்திமுருகன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, நிதிக்குழு தலைவர் முபசீரா, மற்றும் கவுன்சிலர்கள் அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்ற பகுதிக்கு சென்றனர்.
அப்போது குளத்துக்கு நடுவில் மிதவை நடைமேடை உள்ள பகுதியை ஆய்வு செய்ய சென்றுவிட்டு தடுப்புகள் வழியாக திரும்பி வந்துகொண்டு இருந்தனர். அப்போது பணிகள் குழு தலைவர் சாந்திமுருகன் கால் வழுக்கி சாலையில் விழுந்தார். அப்போது இடதுகையை அவர் ஊன்றியதால் கைமுறிவு ஏற்பட்டது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பணிகள் குழு தலைவர் விழுந்து கைமுறிந்ததால் குழு தலைவர்களும், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். பாதியிலேயே ஆய்வை முடித்தனர். இதேபோன்று பொதுமக்கள் பலரும் அந்த இடத்தில் வழுக்கி விழுந்துள்ளனர்.
நீர்நிலைப்பகுதியான அந்த இடத்தில் மழை பெய்து பாசிபிடித்து இருந்ததால் வழுக்கியதாக கூறப்படுகிறது. மறுபுறத்திலும் இதேநிலை இருப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கோரப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story