சுற்றுலா பயணிகள் குவிந்ததால் திக்குமுக்காடிய புதுச்சேரி
4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குவிந்ததால் புதுச்சேரி திக்குமுக்காடியது.
4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குவிந்ததால் புதுச்சேரி திக்குமுக்காடியது.
அழகிய கடற்கரை
புதுச்சேரி சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. அழகிய நீண்ட கடற்கரையை ரசிக்கவும், இதமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். குறிப்பாக விடுமுறை, பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டும்.
இதற்கிடையே தமிழ்ப்புத்தாண்டு, புனிதவெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டதால் பலரும் குடும்பத்துடன் பொழுதை கழிக்க புதுச்சேரிக்கு படையெடுத்தனர்.
கடற்கரை திருவிழா
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், சுற்றுலாத்துறை சார்பில் கடந்த 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை கடற்கரை திருவிழா நடத்தப்பட்டது. இதில் நீர் விளையாட்டுகள், ஆடை அலங்கார அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. கடற்கரை திருவிழா முடிவடைந்த நிலையில், இன்றும் சுற்றுலா பயணிகள் புதுவைக்கு அதிகம் வருகை தந்தனர். இதன் எதிரொலியாக ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன.
கடற்கரை சாலை, பாரதி பூங்கா, மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், அரசு அருங்காட்சியகம், தாவரவியல் பூங்கா என அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
போக்குவரத்து நெரிசல்
இதனால் ஒயிட் டவுன் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சாலையோரம் வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர பழைய துறைமுக வளாகத்தையும் வாகனங்கள் ஆக்கிரமித்தன.
சுற்றுலா பயணிகளின் வருகையால் அண்ணாசாலை, நேருவீதி, புஸ்சி வீதி, கடலூர் சாலை, மரப்பாலம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அணிவகுப்பால் புதுச்சேரி திக்குமுக்காடியது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்பேரில் நகரில் போக்கு வரத்து நெரிசலை சரிசெய்ய முக்கிய சந்திப்புகளில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பஸ்நிலையத்தில் கூட்டம்
புதுச்சேரியில் இன்று சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் நேற்று காலை முதல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் அது மேலும் அதிகரித்தது.
இதற்கிடையே விடுமுறை முடிந்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் சொந்த ஊருக்கு திரும்பியதால் புதுவை பஸ் நிலையத்தில் திருவிழா போல் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக சென்னை, பெங்களூரு செல்லும் பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்தனர்.
Related Tags :
Next Story