நள்ளிரவில் கடலூர்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு


நள்ளிரவில் கடலூர்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 17 April 2022 10:32 PM IST (Updated: 17 April 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

வாகனம் மோதி மின்கம்பம் விழுந்ததால் நள்ளிரவில் கடலூர்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று நள்ளிரவில் முள்ளோடை பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது தனியார் திருமண மண்டபம் அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயர்மின் வயர் அறுந்து, மின்கசிவு ஏற்பட்டு மின்கம்பம் சாய்ந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
உடனே ரோந்து போலீசார் மணிவண்ணன், ஹரி, பழனிச்சாமி, ஞானமூர்த்தி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். இருள் சூழ்ந்த நிலையில் மின் வயர்கள் ரோட்டில் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விபத்தை தவிர்க்க கடலூர்-புதுச்சேரி ரோட்டில் செல்லும் வாகனங்களை இருபுறமும் தடுத்து நிறுத்தினர். கடலூர், புதுச்சேரியில் இருந்து வந்த வாகனங்கள் பாகூர் வழியாக  மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
சம்பவ இடத்திற்கு மின்துறை ஊழியர்கள் வந்து அறுந்து விழுந்த மின் வயர்களை போலீசார் உதவியுடன் துண்டித்தனர். அப்பகுதி மக்களுக்கு மாற்று    ஏற்பாடு  செய்து  மின் வினியோகம் வழங்கப்பட்டது. 
மின் வயர் அறுந்து கிடந்ததால் கடலூர்- புதுச்சேரி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று மாற்று ஏற்பாடு செய்து அசம்பாவிதம்  ஏற்படாமல் துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story