கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திடீர் டெல்லி பயணம்


கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திடீர் டெல்லி பயணம்
x
தினத்தந்தி 17 April 2022 10:53 PM IST (Updated: 17 April 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் முதல் மந்திரியுடன் மோதல் வலுத்து வரும் நிலையில் மேலிட அழைப்பின் பேரில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திடீரென டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகளை அவர் சந்திக்க உள்ளார்.

தெலுங்கானாவில் முதல் மந்திரியுடன் மோதல் வலுத்து வரும் நிலையில் மேலிட அழைப்பின் பேரில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திடீரென டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகளை அவர் சந்திக்க உள்ளார்.
இரு மாநில கவர்னர்
தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக கடந்த 1.9.2019 அன்று நியமிக்கப்பட்டார். இதற்கிடையே புதுச்சேரி கவர்னராக இருந்த கிரண்பெடி பதவி நீக்கம் செய்யப்பட்டு தமிழிசை சவுந்தரராஜனுக்கு 16.2.2021 அன்று புதுச்சேரி கவர்னர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. 
இதையடுத்து அவர் இரு மாநில கவர்னராக இருந்து வருகிறார். வாரத்தில் சில நாட்கள் புதுவையிலும், சில நாட்கள் தெலுங்கானாவிலும் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக சுமூகமான உறவு இல்லாத நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று இருந்தபோது பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரிடம்  கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாக தெரிகிறது. 
வலுத்த மோதல்
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் அரசு நடைபெற்று வருகிறது. சந்திரசேகரராவ் முதல்-மந்திரியாக உள்ளார். இங்கு பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பான நிலை இருந்து வருகிறது.
இதனால் கடந்த சில மாதங்களாக முதல்-மந்திரிக்கும், கவர்னருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். ஆனால் அந்த மரபை மாற்றி கவர்னர் உரை இல்லாமலேயே சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடந்தது.
இதேபோல் அரசு சார்பில் நடத்தப்படும் பல்வேறு விழாக்களில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். கவர்னர் மாளிகையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில்      கலந்து கொள்ளாமல் முதல் மந்திரி சந்திரசேகரராவ் புறக்கணித்தார். 
தொடர்ந்து கவர்னர்- ஆளும் தரப்பினர் இடையேயான மோதல்போக்கு வலுத்துள்ளது. 
புதுவையிலும் போர்க்கொடி
கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்ராசலம் ரெயில் நிலையத்திற்கு சென்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அந்த மாவட்ட அதிகாரிகள் உரிய வரவேற்பு அளிக்கவில்லை. ஒரு மாவட்டத்திற்கு கவர்னர் சென்றால் அங்குள்ள கலெக்டர் வரவேற்பு அளிக்க வேண்டும் என்ற மரபு மீறப்பட்டது. ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அங்குள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பினார்.
இந்தநிலையில் புதுச்சேரியிலும் பொறுப்பு கவர்னரை நீக்கி விட்டு நிரந்தர கவர்னரை நியமிக்க வேண்டும். முதல்-அமைச்சர் ரங்கசாமியை செயல்பட விடாமல் சூப்பர் முதல்- அமைச்சராக செயல்படுகிறார் என தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக இங்குள்ள எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். 
திடீர் டெல்லி பயணம்
தமிழ் புத்தாண்டை கொண்டாடும் விதமாக கவர்னர் மாளிகையான ராஜ்நிவாசில் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்பாடு செய்து இருந்த விருந்து நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜ.க., அ.தி.மு.க. தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இதில் கலந்து கொள்ளாமல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் புறக்கணித்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தெலுங்கானாவுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சென்றார். தற்போது டெல்லி வருமாறு மேலிடத்தில் இருந்து திடீரென அழைப்பு வந்தது. அதை ஏற்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று இரவு தெலுங்கானாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். 
அங்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகளை இன்று (திங்கட்கிழமை) கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேச உள்ளார்.
கவர்னரை மாற்ற முடிவு?
அடுத்த ஆண்டு தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்கும் வகையில் தற்போது அந்த மாநில கவர்னராக உள்ள தமிழிசை சவுந்தரராஜனை மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 
அதாவது, புதுவை மாநிலத்திற்கே தமிழிசை சவுந்தரராஜன் நிரந்தர கவர்னராக நியமிக்கப்படலாம் அல்லது பா.ஜ.க ஆளும் ஏதாவது ஒரு மாநிலத்தில் கவர்னராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கவர்னர் அலுவலக அதிகாரி வட்டாரத்தில் கேட்ட போது, ‘கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி தற்போது டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார் ’ என்று தெரிவித்தனர்.

Next Story