போலீஸ் நிலையம் அருகே தீக்குளித்த வாலிபர் சாவு: சப்-இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம்


போலீஸ் நிலையம் அருகே தீக்குளித்த வாலிபர் சாவு: சப்-இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம்
x
தினத்தந்தி 18 April 2022 3:16 AM IST (Updated: 18 April 2022 3:16 AM IST)
t-max-icont-min-icon

திருவலம் அருகே போலீஸ் நிலையம் அருகே தீக்குளித்த வாலிபர் இறந்தார். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர்,

வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ள குகையநல்லூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சரத் (வயது 26). அறுவடை எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். மேல்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி என்பவர் தன்னை அடிக்கடி மிரட்டுவதாக கூறி, கடந்த 11-ந் தேதி மேல்பாடி போலீஸ் நிலையம் அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் படுகாயமடைந்த அவர் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

முன்னதாக வாலிபர் சரத்தின் உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று குகையநல்லூர் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதே போல் மேல்பாடி போலீஸ் நிலையம் அருகிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலை மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

இந்த நிலையில் சரத் தற்கொலை தொடர்பாக மேல்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா உத்தரவிட்டுள்ளார்.

சரத் குடும்பத்தினர் மீது காதல் விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி சரியான முறையில் விசாரிக்கவில்லை. அதன் காரணமாகவே சரத் போலீஸ் நிலையம் அருகே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். எனவே சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story