எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி


எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி
x
தினத்தந்தி 18 April 2022 4:13 AM IST (Updated: 18 April 2022 4:13 AM IST)
t-max-icont-min-icon

தற்கொலை செய்து கொண்ட விவசாயி கணேசன் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தர்மபுரி மாவட்டம் கரியப்பனஅள்ளி கிராமத்தில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்காக நிலத்தில் அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி விவசாயிகள் பாலவாடி அருகே ஆர்பாட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட விவசாயி கணேசன் என்பவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் விவசாயியின் உடலை அங்கிருந்தவர்கள் மீட்டு பாலவாடியில் வைத்து போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே கணேசன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகையும் அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மு.க.ஸ்டாலின் இரங்கல்

தர்மபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழந்த செய்தியைக் கேட்ட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்றார். உயிரிழந்த விவசாயி கணேசன் குடும்பத்தாருக்கு, தனது ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவித்துள்ளார்.

ரூ.5 லட்சம் நிதியுதவி

மேலும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார். கருணாநிதி வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு, என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும் என்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story