12 நாள் போராட்டத்துக்கு பிறகு தீப்பெட்டி தொழிற்சாலைகள் திறப்பு...!


12 நாள் போராட்டத்துக்கு பிறகு தீப்பெட்டி தொழிற்சாலைகள் திறப்பு...!
x
தினத்தந்தி 18 April 2022 4:00 PM IST (Updated: 18 April 2022 3:45 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் 12 நாள் போராட்டத்துக்கு பிறகு தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உற்பத்தி தொடங்கி உள்ளது.

கோவில்பட்டி,

தமிழகம் முழுவதும் 50 முழு இயந்திர தீப்பெட்டித் தொழிற்சாலைகள், 300 பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற் சாலைகள், 2000 தீப்பெட்டி அடைப்பு ஜாப் ஒர்க் தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. 

இந்த தொழிலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். இவற்றில் 90 சதவீதம் பெண்கள் ஆவார்கள்.

குறிப்பாக கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, கயத்தார், இளையரசனேந்தல்  போன்று பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் மட்டும் தினசரி ரூ. 2 கோடிக்கு தீப்பெட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. 

இத்தகைய தீப்பெட்டி உற்பத்திக்கு தேவைப்படும் பொட்டாசியம் குளோரைடு, பாஸ்பரஸ், மெழுகு, அட்டை, ப்ளூ மேச் பேப்பர் போன்ற உற்பத்தி பொருட்களின் விலை 40 சதவீதம் விலை உயர்ந்து உள்ளது. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் 600 தீப்பெட்டிகள் கொண்ட பண்டல் ஒன்றுக்கு ரூ. 50 விலை உயர்த்தி விற்பனை செய்ய முடிவு செய்தனர். இதற்கு விற்பனையாளர்கள் சம்மதிக்காததால் கடந்த 6-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தீப்பெட்டி தொழிற்சாலைகள் கதவடைப்பு செய்யும் போராட்டத்தினை அறிவித்தனர்.

இந்த போராட்டத்தால் ரூ. 250 கோடி தீப்பெட்ட உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் தொழிலாளர்களுக்கு ரூ. 4 கோடி சம்பள இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் 12 நாட்கள் கதவடைப்பு போராட்டத்தை தொடர்ந்து இன்று கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு தொழிலார்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறுகையில்,

தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்களை சிட்கோ மூலம் கொள்முதல் செய்து தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் சந்தித்து முறையிட்டோம்.

அவர்கள் எங்கள் கோரிக்கைகளை ஏற்று தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை சிட்கோ மூலம் வழங்குவதற்கு முதலமைச்சரிடம் கலந்து விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக கூறினார்கள். 

இதேபோல மத்திய மந்திரி எல். முருகனை சந்தித்து சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களுக்கு தடை விதித்து தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். மத்திய மந்திரி முருகன் இதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார். 

தீப்பெட்டி விற்பனையாளர்கள் தீப்பெட்டி பண்டல் விலை உயர்வு குறித்த பேச்சுவார்த்தை நடத்தியதில்  சுமூகமான முடிவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 

இந்த கதவடைப்பு போராட்டம் காரணமாக 12 நாட்களில் ரூ. 250 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பின் காரணமாக ஜி. எஸ். டி. வரி மூலம் அரசுக்கு சேர வேண்டிய ரூ. 30 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வேலை நிறுத்தம் காரணமாக தொழிலாளர்களுக்கு ரூ. 4 கோடி சம்பள இழப்பு ஏற்பட்டது. 

மத்திய மாநில அரசுகள் தீப்பெட்டி தொழிற் சாலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Next Story