உத்தமபாளையம்: கார் மோதியதில் தாய்-தந்தை கண்ணெதிரே நர்சிங் கல்லூரி மாணவி பலி


உத்தமபாளையம்: கார் மோதியதில் தாய்-தந்தை  கண்ணெதிரே நர்சிங் கல்லூரி மாணவி பலி
x
தினத்தந்தி 18 April 2022 7:25 PM IST (Updated: 18 April 2022 7:25 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே பஸ் நிறுத்தத்தில் தாய், தந்தை கண்ணெதிரே கார் மோதி நர்சிங் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு.

தேனி:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் தாய் தந்தையுடன் கல்லூரி செல்ல பேருந்து நிறுத்ததில் காத்திருந்த நர்சிங் கல்லூரி மாணவி கார் மோதிபரிதாப சாவு 3 பேர் படுகாயம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவரது மகள் அஜிதா (வயது 21) மதுரை தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டு விடுமுறைக்கு சொந்த ஊர் வந்து மீண்டும் கல்லூரிக்கு செல்ல இன்று காலை அவரது தந்தை, தாயார் ஈஸ்வரி (45) மற்றும் அவரது சித்தி புஷ்பம் (40)ஆகியோருடன் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை பஸ்நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர்.

அப்போது கம்பத்தில் இருந்து உத்தமபாளையம் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்றுகண் இமைக்கும் நேரத்தில் 4 பேர் மீதும் மோதியது. இதில் நான்கு பேரும் பலத்த காயம் அடைந்தனர். மாணவி அஜிதா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்துஉத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த சின்னமனூர் கீழப்பூலாநந்தபுரத்தைச் சேர்ந்த புவனேஷ்வரன் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் அனுமந்தன்பட்டி பஸ் நிறுத்த பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும். இதேபோல் பஸ் நிறுத்த பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைக்க தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் உத்தமபாளையம் குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் தாசில்தார் அர்சுணன்,உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு,மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story