தனியார் பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
திருக்கனூர் அருகே தனியார் பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கனூர் அருகே தனியார் பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வராத பஸ்கள்
திருக்கனூர் அருகே உள்ளது செட்டிப்பட்டு கிராமம். இக்கிராமத்திற்கு புதுவையில் இருந்து தினமும் 5 தனியார் பஸ்கள் சென்று வந்தன.
ஆனால் தற்போது செட்டிப்பட்டு கிராமத்திற்கு காலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. மற்ற நேரங்களில் பஸ்கள் சரிவர இயங்கவில்லை. சில பஸ்கள் திருக்கனூர் வரை வந்துவிட்டு அப்படியே திரும்பி புதுச்சேரி சென்றுவிடுகின்றன.
இதனால் செட்டிப்பட்டு கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு திருக்கனூர் மற்றும் புதுச்சேரிக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதுகுறித்து பலமுறை போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
சிறை பிடிப்பு
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்று காலை செட்டிப்பட்டு கிராமத்தில் இருந்து புதுச்சேரி செல்ல முயன்ற 3 தனியார் பஸ்களை சிறைபிடித்து பஸ் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் கிராமத்திற்கு உரிய நேரங்களில் பஸ்களை இயக்க கோரி வாக்குவாதம் செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பஸ்களை சரிவர இயக்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு பஸ் ஊழியர்கள் தொடர்ந்து இனி வரும் நாட்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு செட்டிப்பட்டு கிராமத்திற்கு வந்து செல்வதாக உறுதி அளித்தனர். இதை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story