மேகாலயாவில் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா உடல் சென்னை வந்தது


மேகாலயாவில் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா உடல் சென்னை வந்தது
x
தினத்தந்தி 18 April 2022 6:59 PM GMT (Updated: 18 April 2022 6:59 PM GMT)

மேகாலயாவில் விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா உடல் சென்னை வந்தது.

ஆலந்தூர்,

சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் விஷ்வா தீனதயாளன் (வயது 18). இவர், சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான விஷ்வா, தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு வந்தார். மேகாலயாவில் நடக்கும் 83-வது சீனியர் தேசிய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள சென்றிருந்தார்.

குவாஹாட்டியில் இருந்து ஷில்லாங்கிற்கு காரில் சக வீரர்களுடன் சென்றபோது லாரி ஒன்று இவர்களது கார் மீது மோதியது. இந்த விபத்தில் விஷ்வா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தநிலையில் பலியான விஷ்வா உடல், கவுகாத்தியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை தமிழக வெளிநாட்டு வாழ் தமிழர் நலன் துறை துணை கமிஷனர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் பெற்று வேன் மூலம் சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு விஷ்வா உடலுக்கு அரசு சார்பில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அண்ணாநகர் எம்.எல்.ஏ. மோகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஆனந்தகுமார் மற்றும் அலுவலர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

விஷ்வா, பல தேசிய ரேங்கிங் பட்டங்கள் மற்றும் சர்வதேச பதக்கங்களை பெற்று இருப்பதால் வருகிற 27-ந்தேதி முதல் ஆஸ்திரியாவின் லின்ஸில் நடைபெறும் டபுள்யூ, டி.டி. இளையோர் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story