கார் மோதி கல்லூரி மாணவி பலி


கார் மோதி கல்லூரி மாணவி பலி
x
தினத்தந்தி 19 April 2022 1:48 AM IST (Updated: 19 April 2022 1:48 AM IST)
t-max-icont-min-icon

கார் மோதி நர்சிங் கல்லூரி மாணவி பலியானார். அவரது பெற்றோர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேனி,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி (வயது 58). இறைச்சி வியாபாரி. அவருடைய மகள் அஜிதா (21). இவர், மதுரையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் தொடர் விடுமுறைகாக சொந்த ஊர் வந்திருந்த அஜிதா மீண்டும் கல்லூரி செல்வதற்காக நேற்று அதிகாலை 4 மணி அளவில் அனுமந்தன்பட்டியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அவரை வழியனுப்புவதற்காக தந்தை ஆண்டிச்சாமி, தாய் ஈஸ்வரி (45), உறவினர் புஷ்பம் (40) ஆகியோரும் பஸ் நிறுத்தத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது கம்பத்தில் இருந்து உத்தமபாளையம் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று கண்இமைக்கும் நேரத்தில் சாலையோரமாக நின்றிருந்த அஜிதா, அவரது பெற்றோர் உள்பட 4 பேர் மீதும் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அஜிதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 3 பேரும் உயிருக்கு போராடினர்.

கார் டிரைவர் கைது

தகவல் அறிந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஈஸ்வரி, புஷ்பம் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் அஜிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த சின்னமனூர் கீழப்பூலாநந்தபுரத்தை சேர்ந்த புவனேஷ்வரன் (35) என்பவரை கைது செய்தனர்.

சாலை மறியல்

இதற்கிடையே பஸ் நிறுத்த பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைக்க தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் உத்தமபாளையம்-குமுளி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

உடனே போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

‘போலீஸ்’ ஸ்டிக்கர்

விபத்தை ஏற்படுத்திய கார் கண்ணாடியில் ‘போலீஸ்’ என்று ஆங்கிலத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் போலீஸ் துறையில் பணிபுரியும் ஒருவரின் காராக இருக்கலாம் என்று பொதுமக்கள் கருதினர்.

ஆனால் அரசு துறை சார்பில் ஏலத்தில் விட்டபோது, அந்த காரை புவனேஷ்வரன் வாங்கி பயன்படுத்தி வந்திருக்கிறார். இருப்பினும் ‘போலீஸ்’ என்ற ஸ்டிக்கரை அகற்றாமல் காரை பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

Next Story