இலங்கைக்கு கடத்த முயற்சியா காரைக்கால் கடற்கரையில் பதுக்கிய 1000 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் வாலிபர் கைது


இலங்கைக்கு கடத்த முயற்சியா காரைக்கால் கடற்கரையில் பதுக்கிய 1000 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 April 2022 7:39 PM IST (Updated: 19 April 2022 7:39 PM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் கடற்கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1,000 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர். இலங்கைக்கு கடத்த முயற்சியா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

காரைக்கால்
காரைக்கால் கடற்கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1,000 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர். இலங்கைக்கு கடத்த முயற்சியா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

பெட்ரோல் பதுக்கல்

காரைக்கால் கீழகாசாகுடி மீனவ கிராமத்தை சேர்ந்த வேலையன் மகன் முத்தீஸ் (வயது 30). இவர் கீழகாசாகுடி கடற்கரை பகுதியில் சிறிய அளவிலான குடோன் ஒன்று வைத்துள்ளார். 
அந்த குடோனில் 1,000 லிட்டர் பெட்ரோல் பதுக்கி வைத்திருப்பதாக கோட்டுச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோட்டுச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில், பிரவீன்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த குடோனில் திடீரென சோதனை செய்தனர்.

வாலிபர் கைது

அப்போது அங்கு ஒரு பெரிய பிளாஸ்டிக் தொட்டியில் 1,000 லிட்டர் பெட்ரோல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக முத்தீசை பிடித்து விசாணை நடத்தினர். ஆனால் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து 1,000 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும்.
தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வரும் நிலையில் இவ்வளவு பெட்ரோல் எதற்காக அங்கு பதுக்க வைத்திருந்தார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பெட்ரோல் காரைக்கால் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கை்கு கடத்தலா?

இலங்கையில் தற்போது நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில் கடல் வழியாக பெட்ரோல் கடத்தப்படுகிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 
ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இலங்கை தமிழர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல தயார் நிலையில் இருந்த படகு காரைக்காலில் பிடிபட்டது. படகுக்கான டீசலை பதுக்கி வைத்திருந்ததாக சிலரை போலீசார் கைது செய்தனர். 
யாரும் உரிமை கோராத அந்த படகு இன்னும் காரைக்கால் கடற்கரை சாலையை ஒட்டியுள்ள அரசலாற்றில் தரை தட்டி மூழ்கிய நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் கடற்கரை பகுதியில் பெட்ரோல் பதுக்கியதாக வாலிபர் கைதான சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story