காரைக்கால் தனியார் துறைமுகத்தில் முதன்முறையாக கையாளப்பட்ட கேப் கப்பல்


காரைக்கால் தனியார் துறைமுகத்தில்  முதன்முறையாக கையாளப்பட்ட கேப் கப்பல்
x
தினத்தந்தி 19 April 2022 7:58 PM IST (Updated: 19 April 2022 7:58 PM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் தனியார் துறைமுகத்தில் முதன்முறையாக கேப் கப்பல் கையாளப்பட்டது

காரைக்கால்
காரைக்கால் தனியார் துறைமுகத்தில் முதன்முறையாக ‘கேப் கப்பல்’ கையாளப்பட்டது.

காரைக்கால் துறைமுகம்

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் மேலவாஞ்சூர் கிராமத்தில் தனியார் துறைமுகம் இயங்கி வருகிறது. இந்த துறைமுகம் கடந்த வாரம் 13 ஆண்டை நிறைவு செய்துள்ளது.
இந்தநிலையில் நீளம், அகலம் மற்றும் ஆழம் ஆகியவற்றின் கட்டுப்பாடுகள் காரணமாக கேப் (பெரிய அளவிலான) கப்பல்கள் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைமுகங்களில் மட்டுமே கையாளப்படுகின்றன. இத்தகைய பெரிய அளவிலான சரக்கு கப்பல்களை கையாளும் திறன், காரைக்கால் துறைமுகத்தில் தற்போது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
முதன்முறையாக கேப் சைஸ் கப்பலை (பெரிய அளவிலான சரக்கு கப்பல்) காரைக்கால் துறைமுகம் கையாண்டதன் மூலம் துறைமுகம் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. துறைமுகத்தில் முழு எந்திரமாக்கப்பட்ட அமைப்பின் மூலம் தற்போது அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் 77 ஆயிரம் 381 மெட்ரிக் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கேப் கப்பல்

இதுகுறித்து துறைமுகத்தின் தலைமை செயல் அதிகாரி ஏ.ரகுநந்தன் கூறியதாவது:-
காரைக்கால் துறைமுகத்தில் முதன்முறையாக கேப் கப்பல் கையாளப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற சாதனையை நிகழ்த்தியதற்காக ஒட்டுமொத்த அணிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். இந்த துறைமுகத்தில் இன்னும் அதிக அளவிலான இலக்குகளை நிர்ணயிக்கும் திறன் உள்ளது. வரும் காலங்களில் அவ்வாறு செய்ய நாங்கள் தயாராகி வருகிறோம்.
காரைக்கால் துறைமுகம் தற்போது இரும்பு தாது, இரும்பு வார்ப்பு கம்பிகள், நிலக்கரி, உரங்கள், மணல், சர்க்கரை, கோதுமை, சுண்ணாம்பு மற்றும் ஜிப்சம் போன்ற பல்வேறு சரக்குகளை கையாளுகிறது. சிறந்த உள்நாட்டு இணைப்பு மற்றும் அதன் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் காரைக்கால் துறைமுகம் வரும் காலங்களில், தென்னிந்தியாவில் மிகவும் சிறப்பான துறைமுகமாக மாற உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story