புதுச்சேரி தலைமை செயலாளர் திடீர் மாற்றம்


புதுச்சேரி தலைமை செயலாளர்  திடீர் மாற்றம்
x
தினத்தந்தி 20 April 2022 12:03 AM IST (Updated: 20 April 2022 12:03 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநில தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் திடீரென டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ராஜீவ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி
புதுச்சேரி மாநில தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் திடீரென டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ராஜீவ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசுக்கு கடிதம்

புதுச்சேரி மாநிலத்தின் தலைமை செயலாளராக கடந்த 2017-ம் ஆண்டு முதல் அஸ்வனி குமார் பணியாற்றி வந்தார். மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வழக்கம். ஆனால் புதுவை மாநிலத்தின் தலைமை செயலாளராக அஸ்வனி குமார் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆன நிலையில் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே புதுச்சேரி அரசின் திட்டங்களுக்கு தலைமை செயலாளர் அஸ்வனி குமார் முட்டுக்கட்டையாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி, தலைமை செயலாளரை மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

தலைமை செயலாளர் இடமாற்றம்

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தின் தலைமை செயலாளரான அஸ்வனி குமார் திடீரென டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அருணாசலபிரதேசத்தில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜீவ் வர்மா நியமிக்கப்பட்டு உள்ளார். 
இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயக்குனர் பி.ஜி.கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரிக்கு வருகிற 24-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகை தரவுள்ள நிலையில் தலைமை செயலாளர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது புதுவை அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story