முதல்-மந்திரி சொன்னால் கையெழுத்து போட ‘நான் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை’ கவர்னர் பேச்சு


முதல்-மந்திரி சொன்னால் கையெழுத்து போட ‘நான் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை’ கவர்னர் பேச்சு
x
தினத்தந்தி 20 April 2022 12:43 AM IST (Updated: 20 April 2022 12:43 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி சொன்னால் கையெழுத்து போட நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது என்று தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் கூறினார்.

சென்னை,

தெலுங்கானா மாநில கவர்னராக 2 ஆண்டுகள் மற்றும் புதுச்சேரியில் துணைநிலை கவர்னராக ஓராண்டாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின்பணி குறித்த புத்தகம் வெளியீட்டு விழா, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் புத்தகத்தை வெளியிட, டாக்டர் சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.

நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், நக்கீரன் கோபால் உள்பட ஊடகவியலாளர்கள் புத்தகத்தை பெற்றுக்கொண்டு வாழ்த்தி பேசினர்.

சவாலான பணி

பின்னர் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

கவர்னர் பதவியில் நான் அதிகாரத்தை பயன்படுத்துவதாக ஒரு சிலர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். நான் அன்பை மட்டுமே பயன்படுத்துகிறேன்.

தெலுங்கானா மாநில முதல்-மந்திரியுடன் பணிபுரிவது சவாலாகத்தான் உள்ளது. ஆனால் கவர்னராக எனது பணியை சரியாக செய்து வருகிறேன். எந்த மாநிலத்தில் எந்த வேலையைக் கொடுத்தாலும் செய்ய தயாராக இருக்கிறேன்.

முதல்-மந்திரியின் ஆட்சி அதிகாரத்தில் கவர்னர் தலையிடுவதாக விமர்சனங்கள் வைக்கிறார்கள். ஆனால், என் பணி குறித்து புதுச்சேரி முதல்-மந்திரி சட்டசபையிலேயே பாராட்டு தெரிவித்தார். அதேநேரம் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி என் பணிகள் மீது விமர்சனங்களை அடுக்குகிறார்.

ரப்பர் ஸ்டாம்பு அல்ல

கவர்னரும், முதல்-மந்திரியும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்பதற்கு புதுச்சேரி ஒரு சிறந்த உதாரணம். அதேநேரம் கவர்னரும், முதல்-மந்திரிக்குமான மோதல் போக்கால் மாநிலத்தின் வளர்ச்சி குறையும் என்பதற்கு தெலுங்கானா மற்றொரு உதாரணம். தெலுங்கானா மாநிலத்தில் முதல்-மந்திரி சொன்னால் கையெழுத்து போடுவதற்கு நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்பு கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியை பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நாராயணன் தொகுத்து வழங்கினார். மாநில ஊடக பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

கவர்னருக்கு எதிராக போராட்டம்

நீட் எதிர்ப்பு மசோதா தொடர்பாக தமிழக அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நிலவி வரும் மோதல்போக்கு குறித்து தமிழிசை சவுந்தரராஜனிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "அரசியல் விவகாரங்கள் குறித்து இங்கு கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும். கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்தவோ, அரசு நிகழ்ச்சிகளை புறக்கணிக்கவோ கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story