இரட்டை அகலப்பாதை இணைப்பு பணி - தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்


இரட்டை அகலப்பாதை இணைப்பு பணி - தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 20 April 2022 6:03 AM IST (Updated: 20 April 2022 6:03 AM IST)
t-max-icont-min-icon

இரட்டை அகலப்பாதைக்கான இணைப்பு பணிகள் காரணமாக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட நெல்லை-நாகர்கோவில் ரெயில்பாதையில் வள்ளியூர்-ஆரல்வாய்மொழி ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை அகலப்பாதைக்கான இணைப்பு பணிகள் தொடங்க உள்ளன. இதற்காக இந்த பாதையில் இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

அதன்படி, திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22627/22628) இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 29-ந் தேதி வரை நெல்லை- திருவனந்தபுரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் வரை செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20691) இன்று முதல் வருகிற 28-ந் தேதி வரை நெல்லை வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரெயில் (வ.எண்.20692) நாளை (வியாழக்கிழமை) 21 முதல் வருகிற 29-ந் தேதி வரை நெல்லையில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்படும்.

புதுச்சேரியில் இருந்து மானாமதுரை, விருதுநகர் வழியாக கன்னியாகுமரி வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16861) வருகிற 24-ந் தேதியும், கன்னியாகுமரியில் இருந்து வருகிற 25-ந் தேதி புதுச்சேரி புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16862) ஆகியன நெல்லை-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகின்றன.

சென்னையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12667) வருகிற 28-ந் தேதியும், நாகர்கோவிலில் இருந்து வருகிற 29-ந் தேதி சென்னை செல்லும் ரெயிலும் (வ.எண்.12668) நெல்லை-நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகின்றன.

கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12634) வருகிற 29-ந் தேதி ஒரு நாள் மட்டும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 45 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும். இதனால் இந்த ரெயில் மதுரை ரெயில் நிலையத்துக்கு அன்றையதினம் காலதாமதமாக வந்து சேரும்.

Next Story