கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் நாளை விசாரணை


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் நாளை விசாரணை
x
தினத்தந்தி 20 April 2022 12:59 PM IST (Updated: 20 April 2022 12:59 PM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் நாளை விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு,ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்டப் போலீஸார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு சம்பவவழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மேற்கு மண்டலபோலீஸ் ஐஜி சுதாகர், கோவைசரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா நாளை காலை ஆஜராக வேண்டும் என நீலகிரி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அதன்படி,வழக்கு தொடர்பாக நாளை காலை 10 மணிக்கு சசிகலாவிடம் தனிப்படை போலீசார்  சென்னை வந்து விசாரணை நடத்த  உள்ளனர். கோடநாட்டில் இருந்த சொத்துக்கள் மற்றும் காணாமல் போன பொருட்கள் குறித்தும் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சசிகலாவிடம் விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story