மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திட்டத்தின் மூலம் இதுவரை 91.85 கோடி பயணங்கள்..!
அரசுப் பஸ்களில் மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திட்டத்தின் மூலம் இதுவரை 91.85 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பெண்கள் அனைவரும் நகரப் பஸ்களில் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி மாநிலம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட நகரப் பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து வருகின்றனர்.
பாதுகாப்பான பயணம் என்பது பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். பிறரை சார்ந்து இல்லாமல் பெண்கள், கல்விக் கூடங்களுக்கும், பணிக்கும் தாமகவே சென்று வருவதால் கட்டணமில்லா பஸ் வசதி சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் பயணத்திற்கான அன்றாடச் செலவுகள் குறைக்கப்பட்டு கல்வி உணவு, உடை போன்ற அத்தியாவசிய செலவுகளை அவர்கள் மேற்கொள்வதற்கு இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் 91.85 கோடி பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story