ஆசிரியரை ஆபாசமாக திட்டி தாக்க முயன்ற மாணவர்கள்


ஆசிரியரை ஆபாசமாக திட்டி தாக்க முயன்ற மாணவர்கள்
x
தினத்தந்தி 22 April 2022 2:48 AM IST (Updated: 22 April 2022 2:48 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளியில் ஆசிரியரை ஆபாசமாக திட்டி மாணவர்கள் தாக்க முயன்றுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் அரசு மேல்நிலை பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக சஞ்சய்காந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் குகைய நல்லூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இங்கு பணியில் சேர்ந்தார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிளஸ்-2 வகுப்பில் இருந்த மாணவர்களிடம் ரெக்கார்டு நோட்டு சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ளார். அப்போது மாணவர் ஒருவர் பெஞ்சில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஆசிரியரை மிரட்டி தாக்க முயற்சி

இதனை கண்ட ஆசிரியர் அந்த மாணவனை எழுப்பி ‘ரெக்கார்டு நோட்டு’ கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவன் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் ஆசிரியரை தாக்கும் வகையில் அவரை நோக்கி கையை ஓங்கியபடி சென்றுள்ளார். அந்த மாணவனுக்கு ஆதரவாக மற்றொரு மாணவனும் ஆசிரியரின் அருகே சென்று மிரட்டி உள்ளார்.

மாணவர்களின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறினார். இந்த சம்பவத்தை மற்றொரு மாணவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னிப்பு கடிதம்

இந்த விவகாரம் குறித்து மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேலன் விசாரணை நடத்தினார். மேலும் வருவாய் கோட்டாட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி பள்ளிக்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியர், தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட மாணவன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது மாணவர் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து பெற்றோர்-ஆசிரியர் சங்கம் சார்பில் சம்பந்தப்பட்ட மாணவனின் பாதுகாவலர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மாணவனிடமிருந்து ஒரு மன்னிப்பு கடிதம் வழங்கப்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. அந்த கடிதத்தை ஆசிரியர் ஏற்றுக்கொண்டால் பள்ளியில் தொடர்ந்து படிக்கலாம். ஆசிரியர் மறுத்துவிட்டால் அந்த மாணவனை பள்ளியிலிருந்து நீக்கலாம் என்று வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.

3 நாள் பள்ளிக்கு வர தடை

இதைத்தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 மாணவர்களும் 3 நாட்களுக்கு பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story