‘‘மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவோம்’’ முதல்-அமைச்சர் உறுதி


‘‘மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவோம்’’ முதல்-அமைச்சர் உறுதி
x
தினத்தந்தி 22 April 2022 2:55 AM IST (Updated: 22 April 2022 2:55 AM IST)
t-max-icont-min-icon

‘‘மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவோம்’’ என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் (சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி) பேசினார். அவர் பேசி முடித்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோரிக்கைகள்

தலைவர் கருணாநிதி தமிழகத்தினுடைய முதல்-அமைச்சராக இருந்தபோது அந்தத் துறையை தன் கையில் வைத்துக்கொண்டு எவ்வாறு பணியாற்றினாரோ, அதே வழியில் நின்று, இன்றைக்கு நானும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

இங்கே அ.தி.மு.க.வைச் சார்ந்த உறுப்பினர் அருண்குமாரும், தி.மு.க.வை சார்ந்த உறுப்பினர் உதயநிதியும் மாற்றுத்திறனாளிகள் குறித்துப் பேசி, அதையொட்டி அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள்.

நிச்சயம் நிறைவேற்றுவோம்

அந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் நான் நிச்சயமாக, உறுதியாக படிப்படியாக நிறைவேற்றுவேன். மாற்றுத்திறனாளிகளுக்கென்று அமைக்கப்பட்டிருக்கக்கூடிய ஆணையரகத்திற்கு நானே நேரடியாகச் சென்று, சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய அமைப்புகளுடைய நிர்வாகிகளை அழைத்து, இதில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன; என்னென்ன பிரச்சினைகளையெல்லாம் நாங்கள் தீர்த்து வைத்திருக்கின்றோம். அதனால் நீங்கள் பெற்றிருக்கக்கூடிய நன்மைகள் என்ன; இன்னும் மீண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசிப்பதற்காக மிக விரைவிலே ஒரு பெரிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, நிச்சயமாக அதற்குரிய பரிகாரத்தை இந்த அரசு காணும்; படிப்படியாக அதை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்பதை இங்கு பேசிய உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் இதை ஓர் அறிவிப்பாகவே நான் அறிவித்து அமைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story