கடந்த வார தொடர் விடுமுறை: பழனி முருகன் கோவிலில் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் - ரூ.2 கோடி வருவாய்


கடந்த வார தொடர் விடுமுறை: பழனி முருகன் கோவிலில் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் - ரூ.2 கோடி வருவாய்
x
தினத்தந்தி 22 April 2022 9:03 AM IST (Updated: 22 April 2022 9:03 AM IST)
t-max-icont-min-icon

கடந்த வார தொடர் விடுமுறையில், பழனி முருகன் கோவிலில் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.2 கோடி வருவாய் கிடைத்தது.

பழனி:

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி உலக புகழ்பெற்றது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இதேபோல் வாரவிடுமுறை, முகூர்த்தம், மாத கிருத்திகை உள்ளிட்ட நாட்களிலும் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக இருக்கும். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துவர்.

மேலும் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதேபோல் தரிசன டிக்கெட், ரோப்கார், மின்இழுவை ரெயில் கட்டணம் மூலமும் கோவிலுக்கு வருமானம் கிடைக்கிறது.

இந்தநிலையில் கடந்த வாரம் தமிழ்ப்புத்தாண்டு, புனிதவெள்ளி என 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த காலக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த வார தொடர் விடுமுறையான 4 நாட்களில் மட்டும் சுமார் 6 லட்சம் பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். தரிசன டிக்கெட் மூலம் மட்டும் ரூ.1 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதேபோல் பஞ்சாமிர்த விற்பனை, ரோப்கார், மின்இழுவை ரெயில் கட்டணம் ஆகியவற்றின் மூலம் ரூ.1 கோடி என மொத்தம் ரூ.2 கோடி வருமானம் கிடைத்துள்ளது என்றார்.


Next Story