நகை, மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது; சிறை நண்பர்களை சிக்க வைத்த கண்காணிப்பு கேமரா
வடமதுரை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் சிக்கிய 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 21). இவர் கடந்த 19-ந்தேதி தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே சாவியுடன் நிறுத்தி இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர், மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டார்.
இதுகுறித்து தினேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில், வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
போலீஸ் விசாரணை
அப்போது சிவப்பு நிற சட்டை அணிந்த வாலிபர் ஒருவர், மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் நின்றிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளை, வாலிபர் ஒருவர் பெட்ரோல் கொண்டு வந்து ஊற்றி எடுத்து சென்ற காட்சியும் பதிவாகி இருந்தது.
பெட்ரோல் இல்லாமல் நின்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை துருப்புச்சீட்டாக கொண்டு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில் அந்த மோட்டார் சைக்கிள், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதி பகுதியை சேர்ந்த மகாலிங்கம் (26) என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதையடுத்து அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சிறையில் தொடங்கிய நட்பு
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது மகாலிங்கத்தின் மீது மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது திண்டுக்கல் அருகே உள்ள ஆத்துப்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (25) என்பவரும் மற்றொரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். இதனால் அவர்களுக்கிடையே நட்பு ஏற்பட்டது. சிறையில் இருந்து வெளியே வந்தபோதும் இவர்களின் நட்பு தொடர்ந்தது.
நகைகள் அடமானம்
இந்தநிலையில் கார்த்திகேயன் தன்னிடம் உள்ள திருட்டு நகைகளை அடமானம் வைத்து தருமாறு மகாலிங்கத்திடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதற்கு மகாலிங்கம் சம்மதம் தெரிவித்தார்.
இதனையடுத்து வடமதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மகாலிங்கத்தை வரவழைத்து, கார்த்திகேயன் தன்னிடம் இருந்த நகைகளை அவரிடம் கொடுத்தார். நகையை வாங்கிக்கொண்டு மகாலிங்கம், மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி அருகே வந்தபோது, பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நின்று விட்டது. இதனால் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, கார்த்திகேயனை செல்போனில் தொடர்பு கொண்டு மோட்டார் சைக்கிளை எடுத்து செல்லுமாறு மகாலிங்கம் கூறினார்.
அதன்பேரில் அங்கு வந்த கார்த்திகேயன், மகாலிங்கத்தின் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்று விட்டார். அதன்பிறகு தாமரைப்பாடியில், தினேஷ்குமாரின் வீட்டின் முன்பு சாவியுடன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை மகாலிங்கம் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
2 பேர் கைது
இந்தநிலையில் கார்த்திகேயனை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், கடந்த 6-ந்தேதி வடமதுரை அகத்தியர் நகரை சேர்ந்த தச்சுத்தொழிலாளி செல்வம் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 4½ பவுன் தங்க நகைகள் திருடியதை ஒப்பு கொண்டார்.
அந்த நகைகளையே அடகு வைக்க, மகாலிங்கத்திடம் கார்த்திகேயன் கொடுத்துள்ளார். இதனையடுத்து மகாலிங்கம், கார்த்திகேயன் மீது வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story