கடலில் தவறிவிழுந்து மீனவர் பலி; 6 மணிநேரம் தேடி உடல் மீட்பு


கடலில் தவறிவிழுந்து மீனவர் பலி; 6 மணிநேரம் தேடி உடல் மீட்பு
x
தினத்தந்தி 22 April 2022 5:09 AM (Updated: 22 April 2022 5:09 AM)
t-max-icont-min-icon

குமரி அருகே மீன்பிடிக்க சென்ற இளைஞர் கடலில் தவறி விழுந்த நிலையில் 6 மணி நேரம் கழித்து இறந்த நிலையில் அவரது உடலை மீட்டனர்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே கொட்டில்பாடை சேர்ந்த சேசடிமை என்பவரின் மகன் அலெக்ஸ் அஜூ(27). விசைப்படகில் மீன்பிடி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 19 ம் தேதி இவர் வழக்கம்போல் கடியபட்டணம் சூசைநாயகம்(51) என்பவரின் விசைப்படகில் முட்டம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்றார். அவருடன் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 8 தொழிலாளர்கள் மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த 11 தொழிலாளர்களும் சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில்  இவர்களின் விசைப்படகு 47 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தது. அப்போது அலெக்ஸ் அஜூ வலையில் சிக்கிய மீன்களை படகில் ஏற்றுவதற்கு வலையை இழுத்தார். வலை கனமாக இருந்ததால் பலமாக வலையை இழுத்தார்.

அப்போது நிலை தடுமாறி எதிர்ப்பாராமல் அலெக்ஸ் அஜூ கடலில் விழுந்தார். இதை பார்த்த அருகில் நின்று கொண்டிருந்த  தொழிலாளி சப்தமிட்டார். உடனே தொழிலாளி பாபு  விசைப்படகிலிருந்து கடலில் குதித்து அவரை தேடினார். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. அதற்குள் அவர் கடலில் மூழ்கி விட்டார்.

தகவலறிந்த அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 8 விசைப்படகுகளும் அவரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து படகுகள் தேடியதில் நண்பகல் 12 மணியளவில் மீனவர்களின் வலையில் அலெக்ஸ் அஜூவின் உடல் சிக்கியது. உடனே விசைப்படகினர் முட்டம் துறைமுகத்தில் கரை திரும்பினர்.

இது குறித்து விசைப்படகு உரிமையாளர் சூசைநாயகம் குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். மரைன் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து மரைன் போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Next Story