பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் மண்சரிவு


பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் மண்சரிவு
x
தினத்தந்தி 22 April 2022 12:01 PM IST (Updated: 22 April 2022 12:01 PM IST)
t-max-icont-min-icon

சவரிக்காடு அருகே பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

பழனி:

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவும் மழை பெய்தது. இதற்கிடையே இன்று அதிகாலை 5 மணி அளவில் பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் சவரிக்காடு அருகே 4-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. 

இதனால் பாறைகள், மண் சரிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றது.

இதற்கிடையே தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் கொண்டு மேவிக்கிடந்த மண் அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் போக்குவரத்து தொடங்கியது. 

பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story