தூத்துக்குடி: சிகரெட் மிட்டாய் விற்றால் கடை மூடப்படும் - அதிகாரிகள் எச்சரிக்கை...!


தூத்துக்குடி: சிகரெட் மிட்டாய் விற்றால் கடை மூடப்படும் - அதிகாரிகள் எச்சரிக்கை...!
x
தினத்தந்தி 22 April 2022 12:45 PM GMT (Updated: 22 April 2022 12:37 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் சிகரெட் வடிவ மிட்டாய் விற்றால் கடை மூடப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் சிகரெட் வடிவ மிட்டாய் விற்றால் கடை மூடப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கூறுகையில்,

தூத்துக்குடி மாவட்டத்தில், சமீபத்தில் ஊசி போடும் சிரிஞ்சில் சாக்லேட் நிரப்பி விற்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, ஊசி போடும் சிரிஞ்சில் நிரப்பப்பட்ட சாக்லேட் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால், சிறுவயதிலேயே புகைப்பிடித்தலை மனதில் விதைக்கும் விதமாக, சிறுவர்களை கவர்வதற்கு சிகரெட் வடிவில் மிட்டாய்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டது. 

உடனடியாக அந்த மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. அதனை தயாரித்த நிறுவனங்களில் ஒன்று மதுரையில் அமைந்துள்ளதால், அம்மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தயாரிப்பு நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவொரு வியாபாரியும், ஊசிபோடும் சிரிஞ்சில் சாக்லேட் நிரப்பி விற்றாலோ அல்லது சிகரெட் வடிவ மிட்டாய் விற்றாலோ அவர்களது கடை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Next Story