மத்திய மந்திரி அமித்ஷா நாளை புதுவை வருகை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை(ஞாயிற்றுகிழமை) புதுச்சேரி வருகிறார். மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மகான் அரவிந்தரின் 150 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ளும் அவர், அங்கு ரூ.48 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அரசு முறை பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (ஞாயிற்றுகிழமை) புதுச்சேரி வருகிறார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரி வருகிறார்.
அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
காலை 9.30 மணி அளவில் அவர் ஹெலிகாப்டர் மூலம் புதுவை விமான நிலையம் வருகிறார். அவரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து கார் மூலம் காலாப்பட்டில் உள்ள புதுவை பல்கலைக்கழகத்துக்கு அமித்ஷா செல்கிறார். அங்கு நடைபெறும் அரவிந்தரின் 150-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். அப்போது ரூ.48 கோடியில் கட்டப்பட உள்ள 3 கட்டிடங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
பாரதியார் நினைவு இல்லம்
அங்கிருந்து 11.45 மணிக்கு காரில் புறப்படுகிறார். 12 மணிக்கு அவர் பாரதியார் நினைவு இல்லத்துக்கு வந்து பார்வையிடுகிறார். அதன்பின் 12.10 மணிக்கு அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று தரிசனம் செய்கிறார்.
பின்னர் 12.25 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு 1.30 மணிவரை ஓய்வெடுக்கிறார். 1.30 மணி முதல் 1.55 வரை அவரை மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சர் ரங்கசாமி, புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சந்தித்து பேசுகின்றனர்.
அடிக்கல் நாட்டு விழா
மதியம் 1.55 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு 2 மணிக்கு கம்பன் கலையரங்கத்துக்கு வருகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் புதிய பஸ்நிலையம், குமரகுருபள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு, விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 390 காவலர்களுக்கு பணிநியமன ஆணையையும் வழங்குகிறார். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
நிகழ்ச்சிகள் முடிந்ததும் கம்பன் கலையரங்கிலிருந்து புறப்பட்டு 3.45 மணிக்கு சித்தானந்தா நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்துக்கு செல்கிறார். அங்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். 5.05 மணிக்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கார் மூலம் விமான நிலையத்தை அடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை சென்று விமானத்தில் டெல்லி செல்கிறார்.
பட்டமளிப்பு விழா ரத்து
மத்திய மந்திரி அமித்ஷா புதுவை அரசு மருத்துவ கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமித்ஷா வருகையையொட்டி புதுவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு பகலாக கண்காணிப்ப பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவரை வரவேற்று நகரப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
Related Tags :
Next Story