‘கோடநாடு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' - சசிகலா அறிக்கை


‘கோடநாடு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - சசிகலா அறிக்கை
x
தினத்தந்தி 23 April 2022 2:53 AM IST (Updated: 23 April 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

கோடநாடு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

கோடநாடு குற்ற வழக்கு சம்பந்தமாக நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து சசிகலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன். போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன்.

கோடநாடு என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சாதாரண இடமாக இருக்கலாம். என்னை பொறுத்தவரை எனது அக்கா (ஜெயலலிதா) மிகவும் நேசித்த இடம்.

சந்தேகத்துக்குரிய மரணங்கள்

ஜெயலலிதாவுக்கு நிறைய மன அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுத்த ஒரு இடம் உண்டு என்றால் அது கோடநாடுதான். எங்களை பொறுத்தவரை கோடநாடு பங்களாவை கோவிலாகத்தான் பார்த்தோம்.

இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த அந்த இடத்தில் விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்றபோது நான் சிறையில் இருந்தேன். இந்த சம்பவத்தில் எங்களிடம் நெடுங்காலமாக பணியாற்றிய காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு கொள்ளையும் நடந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தை தொடர்ந்து சந்தேகத்துக்குரிய வகையில் தொடர்ச்சியாக சில மரணங்கள் நடைபெற்றன. இதில் எந்த பாவமும் அறியாத சின்ன குழந்தையும், அவரது தாயும் பலியாகி உள்ளனர்.

தண்டிக்கப்பட வேண்டும்

எனவே, இந்த வழக்கில் போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

இந்த சம்பவத்தில் இன்னுயிரை இழந்த ஒன்றுமே அறியாத அப்பாவிகளான காவலாளி, பிஞ்சு மனம் மாறாத சின்ன குழந்தை, அவரது தாயார் ஆகியோர் மரணத்துக்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story