லேசாக பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இண்டோமெதசின் மருந்து மூலம் சிகிச்சை


லேசாக பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இண்டோமெதசின் மருந்து மூலம் சிகிச்சை
x
தினத்தந்தி 22 April 2022 11:17 PM GMT (Updated: 22 April 2022 11:17 PM GMT)

லேசான மற்றும் மிதமான கொரோனா நோயாளிகளுக்கு இண்டோமெதசின் மருந்து மூலம் சிகிச்சை அளித்து ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யில் பகுதி நேர ஆசிரியரும், மியாட் மருத்துவமனை சிறுநீரகவியல் துறை இயக்குனருமான டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. நிறுவன பேராசிரியர் ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் இண்டோமெதசின் மருந்து மூலம் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் ஆய்வு குறித்து நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

இண்டோமெதசின் மருந்து கடந்த 1965-ம் ஆண்டுகளில் இருந்து மூட்டு வலி நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. அமெரிக்காவில் கடந்த 2006-ம் ஆண்டு நாய்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் இந்த மருந்துக்கு வைரஸ் அழிக்கும் திறனும் உள்ளது என கண்டறியப்பட்டது.

கொரோனாவில் எப்படி நுரையீரல் பாதிக்கப்படுகிறதோ? அதே போன்று சிறுநீரக மாற்று சிகிச்சை அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு இதய செல்கள் பாதிக்கப்படும். அந்த பாதிப்பை தடுக்க இண்டோமெதசின் மருந்து பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

210 பேர்

சிறுநீரக நோயாளிகளுக்கு கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படுவது போல ‘சைடோகைன் ஸ்டராம்’ ஏற்படும், அதை கட்டுப்படுத்தவும் இந்த மருந்து பயன்படுத்து வருகிறது. இதனை அடிப்படையாக வைத்தே கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து மூலம் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்.) ஒப்புதலுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

3 மாதங்கள் நடைபெற்ற இந்த ஆய்வில், 210 கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் 107 பேர்களுக்கு பாராசிட்டமல் மருந்து மூலமும், 103 நபர்களுக்கு இண்டோமெதசின் மருந்து மூலமும். சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் பாராசிட்டமல் மூலம் சிகிச்சை பெற்ற நோயாளிகளில் 20 பேர்களுக்கு ‘ஆக்சிஜன்’ சிகிச்சை தேவைப்படும் நிலை ஏற்பட்டது. ஆனால் இண்டோமெதசின் மருந்து மூலம் சிகிச்சை பெற்ற நோயாளிகள் யாருக்கும் ஆக்சிஜன் தேவை ஏற்படவில்லை.

4 நாட்கள்

அதேபோல பாராசிட்டமல் மூலம் சிகிச்சை பெற்றவர்கள் குணமடைய 7 நாட்கள் தேவைப்படுகிறது. ஆனால் இண்டோமெதசின் மூலம் சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகள் குணமடைய 4 நாட்களே தேவைப்படுகிறது. இண்டோமெதசின் மூலம் சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகளுக்கு, கொரோனா தாக்கத்துக்கு பின்னர் ஏற்படும் மற்ற பாதிப்பும் குறைவாக உள்ளது என்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா முதல் மற்றும் 2-ம் அலையில் தலா ஒரு சோதனை முயற்சியை நாங்கள் மேற்கொண்டோம். இரண்டிலுமே முடிவுகள் ஒரே மாதிரியாகவே உள்ளன.

இந்த மருந்தை கொரோனா சிகிச்சைக்கான மருந்து பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஐ.சி.எம்.ஆரிடம் தெரிவித்து ஆய்வு முடிவுகளையும் வழங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story