மத்திய அரசு பணிகளில் மேலும் 500 பேர் போலி சான்றிதழ் கொடுத்து சேர முயற்சி


மத்திய அரசு பணிகளில் மேலும் 500 பேர் போலி சான்றிதழ் கொடுத்து சேர முயற்சி
x
தினத்தந்தி 23 April 2022 5:04 AM IST (Updated: 23 April 2022 5:04 AM IST)
t-max-icont-min-icon

தபால்துறை பணிகள் உள்பட மத்திய அரசு பணிகளில் சேருவதற்கு மேலும் 500-க்கும் மேற்பட்டோர் போலி சான்றிதழ் கொடுத்தது தமிழக அரசு தேர்வுத்துறையின் பரிசோதனையில் அம்பலம் ஆகியுள்ளது.

சென்னை,

மத்திய அரசு பணிகளான தபால் துறை, ரெயில்வே துறை உள்பட பல்வேறு துறைகளில் அவ்வப்போது காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதற்கு நாடு முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் நடைமுறை இருந்து வருகிறது. அவ்வாறு மத்திய அரசு பணிகளில் சேருவதற்காக வடமாநிலத்தவர்கள் சிலர் தமிழக பள்ளிகளில் படித்தது தேர்ச்சி பெற்றது போன்ற போலி மதிப்பெண் சான்றிதழை பயன்படுத்தி இருப்பதாக சமீபத்தில் ஒரு புகார் எழுந்தது.

அந்த புகாரின் அடிப்படையில் இந்த மாதம் தொடக்கத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 300-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் இதுபோல் போலி மதிப்பெண் சான்றிதழ்களை பயன்படுத்தி வேலைக்கு சேர்ந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த சான்றிதழின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்த தமிழக அரசின் அரசு தேர்வுத்துறை அது போலியானது என்று உறுதி செய்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அதை தெரிவித்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மத்திய அரசு துறைகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அந்தந்த மாநில காவல்துறையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.

குவியும் கடிதங்கள்

இந்த நிலையில் தொடர்ந்து இது போல மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து அதனை தெரிவிக்க, தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத்துறைக்கு தபால் துறை உள்பட மத்திய அரசு துறைகளிடம் இருந்து கடிதங்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

தேர்வுத்துறை அலுவலக ஊழியர்கள் அந்த மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டு போலி சான்றிதழ்களை கண்டறிந்து, உண்மை தன்மையை தெரிவித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் 500 பேர்

அந்த வகையில் மேலும், 500-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் இதுபோல் போலி மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி பணியில் சேர்ந்து இருப்பதாகவும், சேருவதற்கு முயற்சி செய்து இருப்பதாகவும் அரசு தேர்வுத்துறையின் சான்றிதழ் பரிசோதனையில் அம்பலம் ஆகியுள்ளது. அதிலும் குறிப்பிடத்தக்க விஷயமாக உத்தரபிரதேச மாநிலத்தின் தியோரா மாவட்ட தபால் துறை அலுவலகங்களில் பணியில் சேர விண்ணப்பித்திருந்தவர்களில் பலரின் சான்றிதழ்கள் போலி என்று கண்டறியப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி வழங்கியது போன்று இந்தியை முதன்மை பாடமாக கொண்டதாக அந்த மதிப்பெண் சான்றிதழ் உத்தரபிரதேசத்தில் அச்சடிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தபால்துறை பணிகளில்...

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது, 'சான்றிதழின் உண்மை தன்மை குறித்து பரிசோதனை செய்ய எங்களிடம் வேண்டுகோள்கள் வருகிறது. அதில் பல்வேறு போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்து, சம்பந்தப்பட்ட துறைகளிடம் தெரிவித்து வருகிறோம். இவற்றில் பெரும்பாலும் தபால்துறை பணிகளில் சேருவதற்குதான் போலி மதிப்பெண் சான்றிதழ்களை பயன்படுத்தி இருக்கின்றனர். இதில் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. நாங்கள் மதிப்பெண் சான்றிதழ் அசலா? போலியா? என்பதை மட்டும்தான் தெரிவிக்க முடியும்' என்றார்.

இந்த போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்துக்கு யார்தான் கடிவாளம் போடுவார்கள்? என்பது கல்வியாளர்களின் கேள்வியாக இருக்கிறது.

Next Story