பத்திரிகையாளர் நலவாரியத்தின் முதல் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது


பத்திரிகையாளர் நலவாரியத்தின் முதல் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 23 April 2022 5:10 AM IST (Updated: 23 April 2022 5:10 AM IST)
t-max-icont-min-icon

பத்திரிகையாளர் நலவாரியத்தின் முதல் கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடந்தது.

சென்னை,

பத்திரிகையாளர் நலவாரியத்தின் முதல் கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள தினத்தந்தி குழுமத்தின் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தினகரன் நாளிதழின் நிர்வாக இயக்குனர் மற்றும் ஆசிரியர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், தி இந்து நாளிதழின் துணை ஆசிரியர் பி.கோலப்பன், தி வீக் வார இதழின் முதன்மை சிறப்பு செய்தியாளர் லெட்சுமி சுப்பிரமணியன், தீக்கதிர் நாளிதழின் செய்தியாளர் எஸ்.கவாஸ்கர், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சிறப்பு செய்தியாளர் எம்.ரமேஷ் மற்றும் அலுவல்சார் உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முன்கள பணியாளர்கள்

கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

பத்திரிகையாளர் நலவாரியத்தின் மூலம் பல்வேறு ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி, எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற பத்திரிகையாளர்களுக்கு முதல்-அமைச்சருடைய பல்வேறு திட்டங்களையும், பத்திரிகையாளர் நலவாரியத்தின் பல்வேறு உதவி திட்டங்களை எல்லாம் அரசுடன் இணைந்து கடைக்கோடியில் இருக்கக்கூடிய களத்தில் பணியாற்றி கொண்டிருக்கின்ற பத்திரிகையாளர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் எடுத்துச்சென்று கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

கடந்த காலங்களில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் தற்போது திரும்ப பெறப்பட்டிருக்கின்றது. அதேபோன்று, கொரோனா காலத்தில் பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கு உதவித்தொகைகள், குடும்ப நல நிதிகள் உயர்த்தப்பட்டு எந்தவித தாமதமும் இன்றி வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பத்திரிகையாளர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.

பாலமாக...

பத்திரிகையாளர் நலவாரியத்தின் மூலமாக தெரிவிக்கப்படும் கருத்துகள், ஆலோசனைகள் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று விரைவாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்று முதல் பட்ஜெட் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. தற்போது 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஒவ்வொரு துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. செய்தி மற்றும் அச்சு துறையின் மானிய கோரிக்கை வருகிற 27-ந் தேதியன்று நடைபெற உள்ளது.

அதற்கு முன்பாக பத்திரிகையாளர் நலவாரிய உறுப்பினர்களாக பொறுப்பேற்று கொண்டிருக்கக்கூடிய தாங்கள் தெரிவிக்கும் ஆலோசனைகள் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும். முதல்-அமைச்சர் நியாயமான பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணவேண்டும் என்று உறுதியேற்று செயலாற்றிக்கொண்டிருக்கிறார். எனவே அதற்கு வலு சேர்க்கின்ற வகையில் பத்திரிகையாளர்களுக்கும், அரசுக்கும் ஒரு பாலமாக இருந்து இந்த வாரியம் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விண்ணப்பங்கள் பரிசீலிப்பு

கூட்டத்தில் பத்திரிகையாளர் ஓய்வூதியம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. அரசாணையில் பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.2 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

முன்னதாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் முன்னிலை உரையாற்றி பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் அனைவரையும் வரவேற்றார். முடிவில், கூடுதல் இயக்குனர் (மக்கள் தொடர்பு) ச.பாண்டியன் நன்றி கூறினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story