சித்திரை மாத பத்தாமுதய நாளில் தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி..!


சித்திரை மாத பத்தாமுதய நாளில் தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி..!
x
தினத்தந்தி 23 April 2022 12:33 PM IST (Updated: 23 April 2022 12:33 PM IST)
t-max-icont-min-icon

சித்திரை மாதத்தின் பத்தாமுதயம் நாளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி, கேரளாவில் சித்திரை மாத 10-ம் நாள் என்றால் வெகு சிறப்பானது. சித்திரை 10-ம் நாளை பத்தாமுதயம் (பத்து + உதயம் = பத்தாமுதயம்) என்பர்.

அன்றைய நாள் காலையில் விவசாயிகள் விவசாய வேலைகளைத் துவங்குவர். நெல்வயல் உழுவர், விதை நெல் நாற்றுக்காகத் தூவப்படும். வாழைக் கன்று நடுவர். கிழங்கு வகைப் பயிர்களை மண் குவித்து, மண்ணில் ஊன்றி நடுவர். சொல்லப்போனால் விவசாயப் பணிகள் அன்றைய தினம் ஆரம்பமாகி விடும்.

வீட்டின் பின்புறம் ஏதாவது ஒரு செடியையாவது சித்திரை 10-ல் நட்டு வைப்பர். அன்றைய தினம் மதியத்துக்கு மேல் பெரும்பாலும் இடி மின்னலுடன் கன மழை பெய்யும்.

முதல் நாளே இயற்கை தங்களது பயிர்களைக் காக்க மழை பொழிகிறது என மகிழ்ச்சி அடைந்து விவசாயிகள் இறைவனுக்கு நன்றி சொல்வர். பெரும்பாலும் எல்லா பத்தாமுதய நாளிலும் மழை பெய்திருக்கிறது. 

கன்னியாகுமரி மலையோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் நேற்று முன் தினம் மதியம் முதலே இடி மின்னலுடன் மழை பெய்தது. இரவிலும் நிற்காமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

தொடர்மழை காரணமாக பரளியாற்றில் வெள்ளம் வரத்து அதிகரித்துள்ளதால்,  அதன் குறுக்கே உள்ள அருவிக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. இந்த  இயற்கை எழில் மிக்க அருவிக்கரையை சுற்றுலாதலமாக மேம்படுத்த வேண்டும் என  சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் திற்பரப்பு அருவியின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பரந்து விரிந்து பாய்ந்தது. பத்தாம் உதய நாளில் ஆரம்பத்திலேயே மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story