நெல்லையில் தாமிரபரணி நதியை சுத்தம் செய்யும் விதமாக படகில் சென்ற மாவட்ட ஆட்சியர்..!


நெல்லையில் தாமிரபரணி நதியை சுத்தம் செய்யும் விதமாக படகில் சென்ற மாவட்ட ஆட்சியர்..!
x
தினத்தந்தி 23 April 2022 1:49 PM IST (Updated: 23 April 2022 1:49 PM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் கோவில் முன்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறும்படம் மூலம் மற்றும் தூய பொருநை குறித்து படகு மூலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நெல்லை:

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பாக ’தூய பொருநை நெல்லைக்கு பெருமை’ என்ற தலைப்பில் தாமிரபரணி நதிக்கரையில் மரம் நடுதல், புத்தக கண்காட்சி என பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அதன்படி இன்று காலை பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள சின்ன மயிலாறு பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள்  நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில்  நடைபெற்றது. 

அப்போது பாபநாசம் கோவில் படித்துறை, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசார், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகள் தூய்மை பணிகளில் ஈடுபட்டனர். 

மேலும் பாபநாசம் கோவில் முன்பு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுப்பது குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.  பின்னர் தாமிரபரணி குறித்து  குறும்படம் வெளியிடபட்டு, அங்கிருந்த பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்:- தாமிரபரணி ஆற்றில் தூய்மை  பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக 16 ஹெக்டர் விவசாய நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள பழங்கால மண்டபங்கள் தூய்மை படுத்தப்பட்டு, பழைமையான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார். 

மேலும் தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் சுமார் 62 கிலோ மீட்டர் டுரோன் மூலமாக சர்வே எடுக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து அவற்றை தூய்மைபடுத்தும் பணிகள் தன்னார்வலர்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து தாமிரபரணிஆற்றில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கும் விதமாகவும், பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்தும் பாபநாசம் கொட்டாரம் பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை நெல்லை மாவட்ட ஆட்சியர் படகில் சென்று சிவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புலவன்பட்டி படித்துயில் கரையேறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


Next Story