பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கவனம் தேவை- டாக்டர் ராதாகிருஷ்ணன்
சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரி என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கவனம் தேவை என டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
55 ஆக அதிகரிப்பு
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை 1,420 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பாதிப்பு 55 ஆக அதிகரித்துள்ளது.
13 மாநிலங்களில் இருந்து...
தொற்று பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி மட்டுமே உள்ளது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக ஐ.ஐ.டி. வளாகத்துக்குள்ளயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அவர்களுக்கு தேவைப்படும்பட்சத்தில் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
இவர்கள் அனைவருக்கும் விடுதியின் மூலம் கொரோனா தொற்று பரவி உள்ளது தெரியவந்துள்ளது. அங்கு, 13 மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களில் யாரோ ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவி இருக்கலாம். தொற்று எங்கிருந்து வந்தது என்பதை விட, இனி தொற்று மேலும் பரவாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
முககவசம் அணிகிறார்கள்
அதனால்தான் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஐ.ஐ.டி. வளாகத்தில் கொரோனா தொற்று பரவி வருவதால் 95 சதவீதத்துக்கு மேல் ஐ.ஐ.டி.யில் உள்ளவர்கள் முககவசம் அணிந்து இருக்கிறார்கள். மக்கள் அனைவரும் இதேபோல் முககவசம் அணிய வேண்டும். படிப்படியாக தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது 256 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். தற்போது ‘எக்ஸ்.இ’ வகை கொரோனா பாதிப்பு தமிழகத்தில் இதுவரை யாருக்கும் இல்லை. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.ஐ.டி.யில் 514 பேரை பரிசோதித்ததில் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மளமளவென அதிகரித்தது. ஆனால் அந்த நிலைமை தற்போது இல்லை. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
தனிமைப்படுத்தி சிகிச்சை
எனவே தடுப்பூசி செலுத்துவதை விரிவுபடுத்த வேண்டும். தமிழக அரசின் கையிருப்பில் 1.56 கோடி தடுப்பூசிகள் உள்ளன. 1.46 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை. எனவே தடுப்பூசி செலுத்தாதவர்கள் விரைவாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ள ஒரே நாளில் மக்கள் அனைவரும் வந்தாலும் நாங்கள் தடுப்பூசி போட தயாராக இருக்கிறோம்.
தொற்று பாதிக்கப்படுபவர்களை இனி அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே தனிமைப்படுத்தி, அங்கு கிருமிநாசினி தெளித்து, அங்கு இருக்கும் அனைவரையும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது. கடந்த அலைகளில் கொரோனாவை கட்டுப்படுத்தி வென்றுவிட்டோம் என அலட்சியமாக இருந்துவிட கூடாது.
எச்சரிக்கை மணி
தற்போது அதிகரிக்கும் கொரோனா பரவல் அனைவருக்கும் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. எனவே, அனைவரும் கவனமாக இருந்து, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முதல் 3 அலையில் இருந்த பதற்றம் தற்போது தேவை இல்லை.
ஆனால் அதனை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story