ஒடிசாவில் தமிழக பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்தது; 25 பேர் காயம்


ஒடிசாவில் தமிழக பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்தது; 25 பேர் காயம்
x
தினத்தந்தி 25 April 2022 12:24 AM IST (Updated: 25 April 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இருந்து ஒடிசாவின் புரி கோவிலுக்கு சென்ற பக்தர்களின் பஸ், விபத்துக்குள்ளானது. இதில் 25 பேர் காயமடைந்தனர்.

பெராம்பூர்,

ஒடிசாவின் புரியில் புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் உள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் சென்னையில் இருந்து ஒரு பஸ்சில் தமிழக பக்தர்கள் 50 பேர் சமீபத்தில் புரி கோவிலுக்கு சென்றனர். அவர்கள் நேற்று அங்கிருந்து சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இந்த பஸ் கஞ்சம் மாவட்டத்துக்கு உட்பட்ட ரம்பா அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அங்கு சாலை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து கொண்டிருப்பதால் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த பயங்கர விபத்தில் 25 பக்தர்கள் காயமடைந்தனர். அதில் லேசான காயம் ஏற்பட்டுள்ள 21 பேர் சத்ராபூர் துணை மண்டல ஆஸ்பத்திரில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பலத்த காயமடைந்த 4 பேர் மேல் சிகிச்சைக்காக பெராம்பூரில் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரெயில் திரும்புகின்றனர்

முன்னதாக விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் விஜய் அம்ருதா குலங்கே மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.

பின்னர் பஸ்சில் பயணம் செய்த மீதமுள்ள பயணிகளுக்கு மாற்று பஸ் ஏற்பாடு செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுத்தார். ஆனால் அவர்கள் ரெயில் மூலம் சொந்த ஊர் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழகத்தில் இருந்து சென்ற பக்தர்களின் பஸ் விபத்துக்குள்ளான சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story