தமிழக கிராம ஊராட்சிகள் தேசிய அளவில் முன்மாதிரியாக திகழும் முதல்-அமைச்சர் பேச்சு


தமிழக கிராம ஊராட்சிகள் தேசிய அளவில் முன்மாதிரியாக திகழும் முதல்-அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 25 April 2022 5:23 AM IST (Updated: 25 April 2022 5:23 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கிராம ஊராட்சிகள் தேசிய அளவில் முன்மாதிரியாக திகழும் என்று காஞ்சீபுரம் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

தேசிய அளவில் பஞ்சாயத்துராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது.

மு.க.ஸ்டாலின்

இதன்படி காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செங்காடு கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. டி.ஆர்.பாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி - ஊராட்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா, இயக்குனர் பிரவீன் நாயர், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் செஞ்சுராணி கவாஸ்கர், துணைத்தலைவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

புதுப்பொலிவுடன்...

தமிழக உள்ளாட்சி அமைப்புகள் பாரம்பரியமானவரலாற்றை கொண்டது. ஊராட்சி அமைப்புகளை வலுப்படுத்தவும், வலிமைப்படுத்தவும், அதிகார பரவலை உறுதிப்படுத்தவும் அரசியலமைப்பு சட்டத்தின் 23-வது திருத்தம் ஊராட்சி அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த சட்டம் முதல் முதலாக நடைமுறைக்கு வந்தது ஏப்ரல் 24-ந் தேதி. அதுதான் தேசிய ஊராட்சி தினமாக கொண்டாடப்படுகிறது. ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்தாக வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை 17 வகையான நிலையான, நீடித்த வளர்ச்சிக்கு இலக்கணமாக நிலையான வளர்ச்சி இலக்குகளை அறிவித்துள்ளது. அதன்படி ஊராட்சிகளில் எல்லா அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி, தன்னிறைவு அடையக்கூடிய வகையிலே கருணாநிதி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த திட்டம்தான் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம். அந்த திட்டத்தை புதுப்பொலிவுடன் நாங்கள் இப்போது நிறைவேற்ற தொடங்கி இருக்கிறோம்.

கிராம செயலகம்

கருணாநிதி வழியில் செயல்படும் நமது அரசு, உள்ளாட்சிகள் மீது கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் இருப்பதுபோல, ஊராட்சி அளவிலும் அனைத்து துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து அதன் சேவைகள் கிராம மக்களை சென்றடைய 600 ஊராட்சிகளில் ‘கிராம செயலகம்’ உருவாக்கப்பட்டு வருகிறது. இனி ஆண்டுக்கு 6 தடவை கிராமசபை கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும் என்று சட்டசபையில் அறிவித்துள்ளேன்.

நோயற்ற ஊராட்சி இலக்கை எட்டுவதற்கு ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மொத்தம் உள்ள ஊராட்சி பிரதிநிதிகளில் 50 சதவீத இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அனைத்து ஊராட்சி பிரதிநிதிகளுக்கும் 5 முதல் 10 சதவீதம் வரை அமர்வு படியை உயர்த்தி அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 1-ந் தேதியை உள்ளாட்சி தினமாக கடைபிடித்து சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு ‘உத்தமர் காந்தி விருது’ வழங்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழகத்தில் 7.46 லட்சம் மகளிர் சுயஉதவி குழுக்களில் உறுப்பினராக உள்ள 1.7 கோடி மகளிரின் நிதி சுதந்திரம் மற்றும் நிதி மேலாண்மையை உறுதி செய்து நமது அரசு முனைப்புடன் செயலாற்றி கொண்டிருக்கிறது.

தேசிய அளவில் முன்மாதிரியாக திகழும்

நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு கிராம ஊராட்சிகள் மூலம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு ‘திராவிட மாடல் ஆட்சி’ என்பதை உலகுக்கு நாம் உணர்த்திட போகிறோம். நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதின் மூலமாக இந்த கிராம ஊராட்சிகள் தேசிய அளவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும். கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்க ‘முன்மாதிரி கிராம விருது’, ‘உத்தமர் காந்தி விருது’, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படக்கூடிய சிறந்த தொழில்-வணிக நிறுவனங்களுக்கு விருது என பல்வேறு விருதுகளை அரசு அறிவித்து வருகிறது.

உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 100-க்கு 100 சதவீதம் நமது ஆளுங்கட்சியினர் மட்டும் பொறுப்புக்கு வரவில்லை. 5 சதவீதம் அளவு எதிர்க்கட்சியினரும் அந்த பொறுப்புக்கு வந்து உள்ளனர். எனவே அவர்களை எதிர்க்கட்சி, இன்னொரு கட்சி என்று பார்க்காமல், எந்த கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அந்த ஊராட்சிகளுக்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ, என்னென்ன தேவைகள் அவசியம் வேண்டுமோ, அதை நிச்சயம் செய்து தருவோம்.

150 நாளாக...

100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இப்படி பல கோரிக்கைகள் இருக்கின்றன.

இந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் கொடுத்த கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து, நிச்சயமாக உறுதியாக மிக மிக விரைவில் அந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம்.

நேரடியாக வந்து பார்ப்பேன்

செங்காடு கிராமத்தை பொறுத்தவரையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.11 லட்சத்தில் மதுரைவீரன் கோவில் குளம் புனரமைக்கப்படும்.

இது வெறும் அறிவிப்புகள் என்று மட்டும் எண்ண வேண்டாம். நமது ஆட்சியை பொறுத்தவரை கருணாநிதி வழிநின்று, அண்ணா வழிநின்று ‘சொன்னதைத்தான் செய்வோம், செய்வதைதான் சொல்வோம்’ என்ற அந்த நம்பிக்கை உங்களிடம் இருக்கிறது. அதை நான் நிச்சயம் உணருகிறேன்.

இந்த திட்டங்கள் எல்லாம் நடந்து முடிந்திருக்கிறதா? என்பதை மக்களிடம் தொலைபேசி மற்றும் கடிதம் மூலமாக கேட்டு மட்டுமல்ல, நேரடியாக வந்தும் அடுத்த முறை நான் பார்ப்பேன். உங்களது ஒத்துழைப்பும், உங்கள் ஆதரவும் தொடர்ந்து அரசுக்கு இருக்க வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இன்ப அதிர்ச்சி தந்த மு.க.ஸ்டாலின்

இந்த கூட்டம் தொடங்கும் முன்பு வரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்ட மேடையிலேயே அமர்ந்திருந்தார். உறுதிமொழி ஏற்று முடித்ததுமே, ‘மைக்’கை பிடித்தபடி மக்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு வந்து அனைவரிடமும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

முதல்-அமைச்சர் கிராம சபை மேடையில் உட்கார்ந்தபடியே நம்மிடம் பேசுவார் என்று நினைத்திருந்த வேளையில், மக்களோடு மக்களாக அவர் கலந்துரையாட வந்தது, அங்கிருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

‘தயங்காம சொல்லுங்கம்மா...’

அதனைத்தொடர்ந்து, ‘நானே வந்து கேட்பதால் பிரச்சினை எதுவும் இல்லை என்று சொல்ல வேண்டாம். உண்மையை சொல்லுங்க. சும்மா சொல்லுங்கம்மா... பிரச்சினை இருந்தா தயங்காம சொல்லுங்கம்மா’ என்று சகஜமாக முதல்-அமைச்சர் பேசினார்.

இதனால் வந்திருந்த மக்களும் தங்கள் குறைகளை சொல்ல தொடங்கினர்.

சிரிக்க வைத்த பெண்மணி

அப்போது, ‘இந்த கிராமத்தில் குடிநீர் பிரச்சினை இருக்கிறதா?’ என்று அவர் கேள்வி எழுப்பினார். அப்போது ஒரு பெண்மணி, ‘அய்யா... தி.மு.க. ஆட்சியில் குடிநீர் பிரச்சினையே கிடையாது’ என்றார். அந்த பெண்ணிடம், ‘உங்கள் பகுதிக்கு குடிநீர் எங்கிருந்து கிடைக்கிறது?’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டார்.

அப்போது அந்த பெண்மணி, ‘அய்யா... பூமியில் இருந்து தண்ணி கிடைக்குது’ என்றார். இதை கேட்டதும் அருகேயிருந்த பெண்கள் அனைவரும் சிரித்துவிட்டார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அப்போது குபீரென்று சிரித்துவிட்டார். ‘ஓ... பூமியில் இருந்து தண்ணி வருதுல’ என்று அவர் கேட்க, அந்த பெண்ணும் குலுங்கி குலுங்கி சிரித்தார். இது கிராம சபை கூட்டத்தில் கலகலப்பூட்டும் நிகழ்வாக அமைந்தது.

இதற்கிடையே முஸ்லிம் பெண்மணி ஒருவர், கொரோனாவால் கணவர் உயிரிழந்து விட்டதாகவும், குழந்தைகளுடன் சிரமப்படுவதால் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

குறை சொல்ல என்ன இருக்குது?

கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை மிக விரைவில் எடுப்பதாக உறுதி அளித்தார்.

அதேபோல ‘வருகிற 7-ந் தேதி வந்தா, நம்ம ஆட்சி வந்து ஒரு வருஷம் ஆகப்போகுது. இந்த ஒரு வருட ஆட்சி திருப்தியா இருக்குதா?’ என்று மு.க.ஸ்டாலின் கேள்வி கேட்டார்.

இதையடுத்து ‘முழு திருப்தி... தி.மு.க. ஆட்சியில் குறை சொல்ல என்ன இருக்குது?’ என்று ஒட்டுமொத்த மக்களும் உற்சாக கோஷம் எழுப்பினர்.

Next Story