புதுச்சேரியில் மருத்துவ பல்கலைக்கழகம் விரைவில் தொடங்கப்படும்
புதுச்சேரியில் விரைவில் மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரியில் விரைவில் மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
பட்டமளிப்பு விழா
புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பட்டங்களை வழங்கினார்.
அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுவை என்ஜினீயரிங் கல்லூரி மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்தது. அந்த கல்லூரியானது இப்போது தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. நான் டெல்லி செல்லும்போது அங்குள்ள அதிகாரிகள் புதுவை என்ஜினீயரிங் கல்லூரியைப்பற்றி கேட்பார்கள். அப்போது சிறந்த கல்லூரி என்று கூறுவார்கள்.
பேராசிரியர் பணியிடங்கள்
அந்த சிறந்த பெயரை தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் பெறவேண்டும். அத்தகைய சிறப்பு இருந்தால்தான் இங்கு படிக்கும் மாணவர்களை தனியார் நிறுவனங்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கும். இங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் 200 பேரில் 120-க்கும் மேற்பட்டோர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். மேலும் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்.
இதுதான் புதுவை அரசின் முதல் பல்கலைக்கழகம். இது ஆசியாவிலேயே சிறந்த பல்கலைக்கழகம் என்ற பெயரை எடுக்கவேண்டும்.
மருத்துவ பல்கலைக்கழகம்
இதுமட்டுமின்றி விரைவில் மருத்துவ பல்கலைக்கழகத்தை அரசு தொடங்க உள்ளது. புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தவர்களில் பலர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.
தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் படித்த நீங்கள் வேலையில்லை என்று கூறக்கூடாது. சொந்தமாக தொழில் தொடங்கி பலருக்கும் வேலை கொடுக்கவேண்டும்.
அதுமட்டுமின்றி வேலைசெய்வதிலும், தொழில் தொடங்குவதிலும் மட்டுமின்றி ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு மக்களுக்கு உதவிட வேண்டும். இங்கு படிக்கும் மாணவர்கள் புதுவை மாநிலத்துக்கு பெருமையை தேடித்தர வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.
நமச்சிவாயம்
பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
புதிய அரசு பொறுப்பேற்ற பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். 99 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக புதுச்சேரி விளங்குகிறது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி தருகிறார். அந்த நிதியை ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்விவரை பயன்படுத்தி வருகிறோம். படித்து முடித்தவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பினை அளிக்கவேண்டும் என்ற நோக்கில் அரசு பணியிடங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக புதுச்சேரியை கொண்டுவர வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். பிரதமர் கூறியபடி பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்குவோம். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுச்சேரிக்கு வந்து பல புதிய திட்டங்களை தொடங்கிவைத்துள்ளார்.
உறவுப்பாலம்
மத்திய அரசு புதுவை மீது அக்கறை கொண்டு அரசாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு உறவுப்பாலமாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திகழ்கிறார். படித்து முடித்துள்ள அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்பு என்பது கடினமானது.
இளைஞர்களுக்காக ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை பிரதமர் கொண்டுவந்துள்ளார். சுயதொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாணவர்கள் அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.
சபாநாயகர் செல்வம்
பட்டமளிப்பு விழாவில் சபாநாயகர் செல்வம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கல்வித்துறை செயலாளர் அசோக்குமார், சிகாகோ இலியானாஸ் பலலைக்கழக பேராரியர் கிருஷ்ணா ரெட்டி, புதுவை பல்கலைக்கழக பதிவாளர் சிவராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story